திருவனந்தபுரம்: கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் நேற்று திருவனந்தபுரத்திலும் கரை ஒதுங்கின. கடந்த வாரம் திருவனந்தபுரம் விழிஞ்ஞத்திலிருந்து 640 கண்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்த லைபீரிய நாட்டு சரக்கு கப்பல் கொச்சி அருகே கடலில் மூழ்கியது. இதில் 250 டன் கால்சியம் கார்பைடு உள்பட அபாயகரமான அமிலப்பொருட்கள் இருந்ததால் கண்டெய்னர்கள் கரையில் ஒதுங்கினால் பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
இதில் சில கண்டெய்னர்கள் நேற்று முன்தினம் ஆலப்புழா மற்றும் கொல்லம் அருகே கரை ஒதுங்கின. இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே காணப்பட்டன. அதில் இருந்த பொருட்கள் கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று சில கண்டெய்னர்கள் திருவனந்தபுரம் அருகே அயிரூர், வர்க்கலா, இடவா, அஞ்சுதெங்கு ஆகிய பகுதிகளில் கரை ஒதுங்கின.
இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நாட்களில் மேலும் பல கண்டெய்னர்கள் கரை ஒதுங்கலாம் என்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.