*பொதுவாக பிள்ளைகளின் பெயருடன், தந்தையின் முதல் எழுத்தையோ அல்லது அவரது பெயரையோ பெயருடன் சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆனால், கீழப்படப்பை வீரட்டேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், தன் தாயின் பெயருடன் சேர்த்து அழைக்கப்படுகிறார். பார்வதியால், உருவாக்கப்பட்டவர் என்பதால், விநாயகர், அம்பிகையின் செல்லப்பிள்ளை ஆகிறார். எனவே, இவர் இத்தலத்து அம்பிகை சாந்தநாயகியின் பெயரால், “சாந்த விநாயகர்’’ என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையின் மீது காட்சி தரும் இவர், தன்னை வணங்கும் பக்தர்களின் கோபங்களைக் குறைத்து, சாந்த குணத்தை தருபவராக அருளுவதாலும், இப்பெயரில் அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.
*சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டியில் உள்ள `சுட்டவிநாயகர்’ கோயிலில், தீப்பெட்டி தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்து எரிந்த தீக்குச்சியை வீட்டில் சேமித்து வைக்கிறார்கள். காரணம், விபத்து நேராமல் இந்த விநாயகர் காப்பார் என்பது நம்பிக்கை.
*சீர்காழியிலிருந்து கிழக்கில் 8.கிமீ தொலைவில் திருநாங்கூர் செல்லும் வழியில் உள்ள திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள் கோயிலில், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் “நாலாயிரத்தொரு விநாயகர்’’. இவ்விநாயகருக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த நீர் கீழே இறங்காமல் சிலையின் உள்ளே சென்றுவிடுவதாக கூறுகிறார்கள். ராமபிரான் தலைமையில்
4 ஆயிரம் முனிவர்கள் அஸ்வமேத யாகம் செய்தனர். விநாயகரை வழிபட மறந்து போன காரணத்தினால், முனிவர்களுக்கு யாக மந்திரங்கள் மறந்து போய், யாகம் தடைப்பட்டு போனது. அதன் பிறகு நாரதர் வாக்குப்படி, விநாயகரை வழிபட்ட பின்னர், யாகம் பூர்த்தியானது. இந்த யாகத்தில் விநாயகரும் கலந்துகொண்டார். அவரே நாலாயிரத்தொரு விநாயகர்.
*நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில், கள்ளவாரண பிள்ளையார் அருள்பாலிக்கிறார். பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த பிறகு, மகா விஷ்ணு விநாயகரை வழிபடாமல் அதை அனைவருக்கும் கொடுத்தார். இதனால், விநாயகர் அந்த அமிர்தகுடத்தை எடுத்து வந்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே, இத்தலத்தின் விநாயகர் “கள்ளவாரண பிள்ளையார்’’ என அழைக்கப்படுகிறார்.
*மதுரை மீனாட்சியம்மன் கோயில் கீழ ஆடி வீதியில் விநாயகர், வன்னி மரத்தடியில் வீற்றுள்ளார். வன்னி மர இலையால் விநாயகரை அர்ச்சித்தாலோ அல்லது வன்னி விநாயகரைச் சுற்றி வந்து வழிபட்டாலோ, தீவினைகள் விலகும் என்பது ஐதீகம். மேலும், வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய விருட்சங்களும் உள்ளன. இவ்வாறு ஒன்பது விருட்சங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம். இந்த ஒன்பது மரங்களும் மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குகிறார்கள்.
*விநாயகரை அன்றாடம் வழிபட்டு “சீக்கிய செந்தாமரை’’ என்னும் அகவையை ஔவையார் பாடிய திருத்தலம் விழுப்புரம் மாவட்டம் கீழையூரிலிலுள்ள வீரட்டானேசுவரர் திருக்கோயில்.
*நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகரை “பிரம்மஹத்தி விநாயகர்’’ என்கிறார்கள். எப்படிப்பட்ட பாவச் செயல்களையும் செய்தவர்களையும் மன்னித்து அருள் வழங்கும் ஆற்றல் மிக்கவர் இந்த விநாயகர் என்பதால், இந்த பெயர். இந்த கோயிலில்தான் திருநாவுக்கரசர் பாடிய பாடலால், மூடிக் கிடந்த கோயில் கதவு திறந்தது. பின்னர், திருஞானசம்பந்தர் பாட, திறந்த கதவு மூடிக்கொண்டது. புனிதமான இந்த கதவுக்கு வெள்ளிக்கவசம் சாத்தியுள்ளனர்.
*திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயில் மேற்கு வாசலுக்கு எதிரே உள்ளது திருமூர்த்தி கோயில். இங்கே பிரம்மனுக்கு தனி சந்நதி உள்ளது. இவருக்கு அருகே எழுந்தருளியுள்ளார். “அப்ப மூடல் கணபதி’’ இவரை அப்பம் கொண்டு பூஜித்தால், தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஒரு பெரிய அண்டா நிறைய அப்பங்களை இவரின் முன் வைத்து பூஜிப்பார்கள். அந்த விநாயகர் உருவம் மூடும் வரை அண்டாவிலிருந்து அப்பங்களை எடுத்து கணபதிக்கு அபிஷேகம் செய்வார்கள். அப்பங்களை சிதற விடாமல் இருக்க, கம்பி வலை அமைந்துள்ளது. இவ்வாறு அபிஷேகம் செய்யப்பட்ட அப்பங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.
*நெல்லை மாவட்டத்தில் கருவேலங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயில் மண்டபத்தில், ஒரு விநாயகர் சிலை உள்ளது. கனமற்ற இந்த விநாயகரை தூக்கினால் கீழே உள்ள ஒரு கதவு தானாகவே திறந்து கொள்ளும். அங்கே ஒரு பெரிய அறை காணப்படும். அதில் ஒருவர் தாராளமாக ஒளிந்துகொள்ளலாம். ஒளிந்து கொள்ளும் பக்தர்களை காக்கும் விநாயகர் இவர். அந்நாளில் இப்பகுதியில் மன்னர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்களாம். அப்போது பெண்கள் ஒளிந்துகொள்ள இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
*திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்கிர தேவதையாக விளங்கிய போது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்தார். அவர்தான் இத்தலத்தில் உள்ள “உக்கிரம் தணித்த விநாயகர்’’ இவரை வழிபட மன சாந்தி கிடைக்கும்.
*இமயமலைத் தொடரில் லடாக் பகுதியில் இருக்கும் லே பகுதியில் உள்ள பிள்ளையாருக்கு “லே பிள்ளையார்’’ என்று பெயர். இந்த பிள்ளையார்தான் உலகிலேயே மிகவும் உயரத்தில் இருக்கும் பிள்ளையார். இவர் கடல் மட்டத்திலிருந்து 11,500 அடி உயரத்தில் இருக்கிறார். இக்கோயிலில் உள்ள பிள்ளையாரை வருடத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற காலங்களில் இக்கோயில் பனியால் சூழப்பட்டிருக்கும்.
*விநாயகருக்கு என்று அமைந்திருக்கும் தனித்துவமான ஆலயங்கள் பல நம் நாட்டில் உண்டு. அங்கு மூலவராக விநாயகரே எழுந்தருளியிருப்பார். அப்படிப்பட்ட ஆலயங்களில் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் மணிமூர்த்தீஸ்வரம். திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் சிறப்புகள் பல. ஆலயத்தில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானுக்கு, “உச்சிஷ்ட கணபதி’’ என்பது பெயர்.
விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. தன் தேவியான வல்லபையைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடி காட்சி கொடுக்கும் அம்சத்தை இங்கு மட்டுமே காணலாம். அதேபோல், ஆலய உட்பிராகாரத்தில் மூலவரைச் சுற்றி 16 வகையான விநாயகர்கள் அருள் புரிகின்றனர். தேவியை மடியில் வைத்திருக்கும் வல்லப கணபதி, சக்தி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சங்கர கணபதி, சித்திபுத்தி கணபதி ஆகிய 5 விநாயகர் வடிவங்களை இங்கு மட்டுமே காணலாம்.
*பொதுவாக எல்லா கோயில்களிலும் முதலில் விநாயகருக்கு வழிபாடு செய்து விட்டுத்தான் மற்ற தெய்வங்களுக்கு வழிபாடு செய்வர். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில், முதலில் தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. கடைசியாக விநாயகருக்கு வழிபாடு செய்கிறார்கள். இது வேறு எந்த கோயிலிலும் காணமுடியாத நிகழ்வாகும்.
*தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோயிலை கட்டும் போது, விநாயகரை பிரதிஷ்டை செய்வதற்காக சேர நாட்டிலிருந்து சிலையெடுத்து வந்தார். அப்போது அந்த சிலை ஒரிடத்தில் தவறி விழுந்துவிட்டது. அதன் பிறகு அந்த சிலையை எடுக்க முடியவில்லை. அன்றிரவு மன்னரின் கனவில் விநாயகர் தோன்றி, “சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டேன், இங்கேயே எனக்கு கோயில் எழுப்பு’’ என்றாராம். அதன்படி உருவான கோயில்தான். தஞ்சை மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் வழியில் உள்ள பிள்ளையார் பட்டி என்னும் ஊரில் உள்ள “ஹரித்ரா விநாயகர்’’ கோயில். இந்த கோயிலில் வழிபட்டால், சர்வ மங்களமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
*திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹேமவர்னேசுவரி அம்மன் உடனுறை தார்மீகநாதர் சுவாமி திருக்கோயில். இங்கு துளசிக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷமானது. இங்குள்ள கல்யாண விநாயகருக்கு, யானைக்கு உள்ளது போல் பக்கவாட்டு கண்கள் இல்லை. நேர்க்கண்கள்தான் உள்ளன. அதனால் நமது குறைகளை நேருக்கு நேர் தீர்த்து வைப்பதாக ஐதீகம். இத்தல அம்பாளுக்கு பெளர்ணமி அன்று பூரண சந்திரஒளியில் விசேஷ அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கோவீ.ராஜேந்திரன்