Tuesday, September 10, 2024
Home » ஸ்லீப் ஆப்னியா அறிவோம்!

ஸ்லீப் ஆப்னியா அறிவோம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

நாளுக்கு நாள் நவீனங்கள் பெருக.. பெருக.. நோய்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது. இனம் புரியாத, வாயில் நுழையாத பலவித நோய்கள் தற்போது வந்துவிட்டன. ஸ்லீப் ஆப்னியா அப்படி ஒன்றும் விநோதமான நோய் எல்லாம் இல்லை. ஆனால், சமீப காலமாகத்தான் இது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ஸ்லீப் ஆப்னியா என்பது தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறாகும். இது மூச்சுத்திணறலாக மாறி, ஆழ்ந்த தூக்கத்திலேயே உயிர் பிரியவும் வாய்ப்புள்ளது. இதைத்தான் மருத்துவ உலகம் ஸ்லீப் ஆப்னியா என்று கூறுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் மட்டும் சுமார் 5 கோடி பேர் இந்த ‘ஸ்லீப் ஆப்னியா’வில் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஸ்லீப் ஆப்னியா என்றால் என்ன?

ஒருவருக்கு மூச்சுக் குழலில் ஏற்படும் தடை, அதாவது ஒருவர் குறட்டைவிட்டு தூங்கினால், ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், அது தவறானது. தூக்கத்தின்போது ஏற்படும் சுவாச தடைகள்தான் குறட்டை ஒலியாக வெளிப்படுகிறது. இதற்கு முறையான சிகிச்சை பெறாவிட்டால், தூக்கத்திலேயே உயிர் பிரியவும் வாய்ப்பிருக்கிறது.

ஸ்லீப் ஆப்னியா வகைகள்

அப்ஸ்ட்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா (Obstructive Sleep Apnea), சென்ட்ரல் ஸ்லீப் ஆப்னியா (Central Sleep Apnea), காம்ப்ளக்ஸ் ஸ்லீப் ஆப்னியா (Complex Sleep Apnea) என இதில் மூன்று வகை உள்ளன.தொண்டைத் தசைகளில் உள்ள இறுக்கம் அல்லது கோளாறு காரணமாக உருவாவது அப்ஸ்ட்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா எனப்படுகிறது. அதாவது தூக்கத்தின்போது மூச்சை நிறுத்துவது.

இரண்டாவது வகை சென்ட்ரல் ஸ்லீப் ஆப்னியா. இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர், ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்லும்போது அவரது மேல் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த நபருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தூங்க முடியாமல் போகிறது. சில நேரங்களில் மூளையில் இருந்து தசைகளுக்குச் சரியான சமிக்ஞைகள் செல்லாவிட்டாலும் ஸ்லீப் அப்னியா ஏற்படும். இதனை, ‘சென்ட்ரல் ஸ்லீப் அப்னியா’ எனக் கூறுகின்றனர்.

அதாவது, நமது சுவாசக்குழாயில் எங்கேனும் அடைப்பு ஏற்பட்டு இருந்தால், சுவாசக் கோளாறு ஏற்பட்டு மூச்சு விட சிரமமாகி ஸ்லீப் ஆப்னியா வரும். இது மூக்கடைப்பு, தொண்டை வறண்டு போதல், தடிமனான கழுத்து, உடல் பருமன் ஆகியவை மூலமாகவும் ஏற்படலாம். மேற்கூறிய இரண்டு வகையான அப்ஸ்ட்ரக்டிவ் மற்றும் சென்ட்ரல் என்ற இருவகைகளும் இணைந்த ஆப்னியாவை காம்ப்ளக் ஸ்லீப் ஆப்னியா என்கிறார்கள்.

ஸ்லீப் ஆப்னியா மெலிந்து காணப்படுபவர்களில் 3 சதவீதம் பேருக்கும், உடல் பருமனாக இருப்பவர்களில் 20 சதவீதம் பேருக்கும் ஏற்படுகிறது; பெண்களைவிட ஆண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது;பெண்களுக்கு மெனோபாஸுக்குப் பின்னர் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் இதய நாளங்கள் சம்மந்தப்பட்ட நோய்களும் வரும். ஆனால், வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு நோய் தங்களுக்கு இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை என்பதுதான்.

சிஓபிடிக்கும் ஸ்லீப் ஆப்னியாவுக்கும் தொடர்பு என்ன?

சிஓபிடி என்பது நுரையீரல் பாதிப்பு, ஸ்லீப் ஆப்னியா என்பது சுவாசக் கோளாறு. நுரையீரல் தனது வேலையில் இருந்து செயலிழக்கும்போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அப்படி மூச்சுக் காற்று தடைப்படும்போது, சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இதனால், இரவில் தூங்கும்போது மூச்சுக் காற்று தடைப்படுகிறது. இதனால் ஸ்லீப் ஆப்னியா ஏற்படுகிறது. இவைதான், சிஓபிடிக்கும் ஸ்லீப் ஆப்னியாவுக்கும் உள்ள தொடர்புகள்.

ஸ்லீப் ஆப்னியாவின் அறிகுறிகள் என்னென்ன?

எப்போதும் உடலில் ஒருவிதமான அயர்ச்சி, காலையில் எழுந்திருக்கும்போதே தலைவலி அல்லது எரிச்சலான மனநிலை, காலையில் நாக்கு வறண்டு போதல், மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள். இரவு முழுவதும் தூக்கமின்மை போன்றவை அறிகுறிகளாகும்.ஆழமான குறட்டை, உறக்கத்தின் போது மூச்சுவிடத் தவறி சிரமப்படுதல், உறங்கும்போது காற்றுக்குத் தவித்தல், உறக்கமின்றித் தவித்தல், அதிக நேரம் பகலில் தூங்குதல், கவனச் சிதறல், எரிச்சலான உணர்வு போன்றவையும் ஆப்னியாவின் அறிகுறிகள்தான்.

மேலும், தூக்கத்தில் சத்தமான குறட்டை தொடர்ந்து ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அப்போதுதான் நோய் தீவிரமாக இருந்தால் உடனடியாக தகுந்த சிகிச்சை பெற வழிவகுக்கும்.

பரிசோதனைகள்

பொதுவாக ஒருவருக்கு ஸ்லீப் ஆப்னியா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, பாலிசோம்னோகிராம் என்ற பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் தூக்கத்தின்போது அதனை ஆய்வு செய்வதே இந்த பரிசோதனையின் முறை. அதாவது ஒருவர் தூங்கும் முறை, குறட்டை ஒலியின் அளவு சுவாச குழாயில் ஏற்படும் அசெளகரியங்கள், ஆழ்ந்த உறக்கநிலை இதில் கணக்கிடப்படும். அதன் அடிப்படையில், பாதிப்பின் தீவிரம் அளவீடு செய்யப்படும். பின்னர், டைனமிக் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் கண்டறிதல், மேலும், மூச்சுக்குழலில் எங்கேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிந்து, அந்த அடைப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதனைச் சரி செய்ய வேண்டும்.

சிகிச்சைகள் என்னென்ன?

மருத்துவர்கள் ஆலோசனைப்படி தூக்கத்தின்போது ஒருவரின் சுவாசப்பாதையை சீராக வைப்பதற்கான வழிகளைக் கடைப்பிடிப்பதே சிறந்த வழி. சிலருக்கு மருத்துவர்களே சுவாசத்தை எளிதாக்கும் கருவிகளைப் பரிந்துரைப்பர். CPAP (Continuous Positive Airways Pressure) எனப்படும் கருவி ஒரு நபரின் மூக்கில் பொருத்தக் கூடியது. இது அந்த நபரின் தூக்கத்தின் போது மூக்கில் ஏற்படும் காற்றழுத்தத்தை சீராக வைத்து சுவாசப் பாதையில் மூச்சடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிலருக்கு அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த பரிந்துரைக்கப்
படுகிறது.

தற்காத்துக்கொள்ள!

மது அருந்துதல், புகைபிடித்தல் பழக்கங்களைத் தவிர்த்தல் வேண்டும். உடல்எடையை சரியாகப் பராமரிக்க வேண்டும். இரவில் தூங்கும் நேரத்தை ஒழுங்கபடுத்த வேண்டும்; துரித உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். ஏதேனும் நோய்க்காக அதிகளவில் மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருத்தல் வேண்டும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi