நன்றி குங்குமம் டாக்டர்
புற்றுநோய் கதிரியக்க நிபுணர் பவஹரன் ராஜலிங்கம்
பொதுவாக புற்றுநோய்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஒன்றுதான் மல்டிபிள் மைலோமா. இந்த மல்டிபிள் மைலோமா புற்றுநோய் முந்தைய காலங்களில் குறைந்தபட்சம் 70 வயதுகளில் காணப்பட்டது. தற்போது 50களிலேயே காணப்படுகிறது.
மேலும், உலகளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் மல்டிபிள் மைலோமாவில் பாதிக்கப்பட்டு வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் இந்த மல்டிபிள் மைலோமா புற்றுநோய் வரும் காலங்களில் மிகப்பெரிய விசுவரூபம் எடுக்கும் வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. இந்த மல்டிபிள் மைலோமா புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது.. அதன் சிகிச்சை முறைகள் என்ன.. அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள் போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த புற்றுநோய் கதிரியக்க நிபுணரான மருத்துவர்
பவஹரன் ராஜலிங்கம்.
மல்டிபிள் மைலோமா என்றால் என்ன?
மல்டிபிள் மைலோமா என்பது பிளாஸ்மா செல்களை பாதிக்கும் ஒரு அரிய வகை ரத்தப் புற்றுநோயாகும். பிளாஸ்மா செல்கள், வெள்ளை ரத்த அணுக்கள் (WBC கள்) ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதற்கும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுவதாகும். இந்த பிளாஸ்மா செல்கள் எலும்பு மஜ்ஜை, எலும்புகளுக்குள் உள்ள வெற்றுப் பகுதியில் காணப்படுகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இந்த பிளாஸ்மா செல்கள் திடீரென கட்டுப்பாட்டை மீறி அதிக அளவில் வளர்ச்சி அடையும்போது அது மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்தி அழற்சியை உண்டாக்குகிறது. இவையே ஒரு கட்டத்தில் புற்றுநோயாக உருவெடுத்து மல்டிபிள் மைலோமாவுக்கு வழிவகுக்கிறது. இந்த புற்றுநோய் செல்கள் பொதுவாக எலும்பு மஜ்ஜையின் பல பகுதிகளை பாதிக்கும் என்பதால் இதனை மல்டிபிள் என்று சொல்லப்படுகிறது.
மல்டிபிள் மைலோமா உருவாக என்ன காரணம்?
மல்டிபிள் மைலோமா வருவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், அசாதாரண மரபணு மாற்றங்கள், அழற்சி அல்லது சுற்றுச்சூழல் காரணமாக உருவாகிறது. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நாம் உண்ணும் உணவின் மூலமாகவே அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துவதாக தற்போதை ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதாவது நச்சு கொல்லி, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்ற உணவுகளை நாம் உண்ணுவதால் ஏற்படுகிறது.
இன்றைய காலச்சூழலில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நமக்கு தெரியாமலேயே சிறிதளவு ஸ்லோ பாய்சனை உண்டு கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதுதான் மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்தி நோய்களை உருவாக்குகிறது. முந்தைய காலங்களில் சுமார் 70 வயதுக்கு மேல்தான் இந்த மல்டிபிள் மைலோமா காணப்பட்டது. ஆனால், தற்போது 50-60 வயதுகளிலேயே காணப்படுகிறது. இது மல்டிபிள் மைலோமா என்றில்லாமல் பொதுவாக எல்லா புற்றுநோய்களுக்குமே பொருந்தும். அதில் குறிப்பாக, மல்டிபிள் மைலோமா உணவின் மூலம் நாம் வயிற்றுக்குள் போகும் பூச்சிக்கொல்லிகளின் வீரியம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மல்டிபிள் மைலோமாவின் வகைகள்
மல்டிபிள் மைலோமா மூன்றுநிலைகளைக் கொண்டுள்ளது. அதில் மலிகனன்ட் ஸ்டேஜ் மற்றும் ப்ரீமலிகனன்ட் ஸ்டேஜ் என்று சொல்லப்படுகிறது. அதில் ப்ரீமலிகனன்ட் ஸ்டேஜ் பொருத்தவரை புற்றுநோயாக உருவாவதற்கு முன்பு கண்டறியப்படுவதாகும். அதாவது, சமீபகாலமாக பலரும், ஆண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் எல்லாம் செய்து கொள்ள தொடங்கியுள்ளனர். அவ்வாறு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யும்போது நமது உடலில் பிளாஸ்மா செல்கள் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டு அதன்மூலம் ஆரம்பநிலையிலேயே புற்றுநோயாக மாறாமல் தடுப்பதாகும். மிலிகனன் ஸ்டேஜ் என்பது நோய் கண்டறியப்பட்ட பின்பு நோயின் தீவிரத்தை பொருத்து சிகிச்சை எடுத்துக் கொள்வதாகும்.
அறிகுறிகள்
மல்டிபிள் மைலோமாவை பொருத்தவரை பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் தென்படுவதில்லை. நோய் சற்று தீவிரம் அடையும்போதே இதன் அறிகுறிகள் தென்படுகிறது. அதுவும் நபருக்கு நபர் மாறுபடுகிறது. பொதுவான அறிகுறிகளை CRAB என்று சுருக்கமாக மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது. அதாவது கால்சியம் பிரச்னை, சிறுநீரக செயலிழப்பு, ரத்தசோகை, எலும்பு பாதிப்பு போன்றவைகளாகும்.
உதாரணமாக, கால்சியம் பாதிப்பு என்று எடுத்துக் கொண்டால் எலும்பில் உற்பத்தியாகும் கால்சியத்தை பாதிக்கும். இதனால், எலும்புகள் வலுவிழந்து காணப்படும். இதனால் லேசாக எங்காவது தட்டினாலும் விழுந்து எலும்பு முறிவு ஏற்படும். இது தவிர, முதுகு தண்டு எலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி முதுகுத் வலி, கால்வலி, கைவலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
சிறுநீரக செயலிழப்பு (அதாவது அதிகளவில் உற்பத்தியாகும் இந்த பிளாஸ்மா செல்கள் சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும். இதனால் இவை மொத்தமாக சிறுநீரகத்தில் அடைப்பை ஏற்படுத்தி சிறுநீரகம் பழுதடைந்து போய்விடும். ரத்தசோகை ரத்த அணுக்களை பாதிப்பதால் ரத்த உற்பத்தி குறைந்து ரத்த சோகையை ஏற்படுத்தும். எனவே, இந்த மல்டிபிள் மைலோமாவை பொருத்தவரை, இது இவருக்கு தான் வரும். இந்த வயதில்தான் வரும் என்பதெல்லாம் கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதிலும் வரும் வாய்ப்பு உண்டு. இதில் அதிக வாய்ப்பு என்பது வயது முதிர்வு காரணமாகிறது.
இது தவிர, மற்ற அறிகுறிகள் என்றால் எடை இழப்பு, எலும்பு வலி, குமட்டல், அடிக்கடி தொற்றுகள் ஏற்படுவது, சோர்வு, குழப்பம் மற்றும் பசியின்மை, கால்களில் பலவீனம் அல்லது உணர்வின்மை, அதிக தாகம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள், பார்வை இழப்பு அல்லது பார்வை பிரசினைகள் ஆகியவை சில பொதுவான அறிகுறிகளாகும்.
சிகிச்சை முறைகள்
மல்டிபிள் மைலோமாவை பொருத்தவரை ஒருமுறை வந்துவிட்டால், சிகிச்சை அளித்தாலும், அது மீண்டும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த இடைப்பட்ட காலத்தை டிஸிஸ் ப்ரீ ப்ரீயட் என்று சொல்கிறோம். இந்த காலகட்டத்தில், மல்டிபிள் மைலோமாவின் தீவிரத்தை குறைப்பது மற்றும் அதன் வளர்ச்சியை தடுப்பதும் முதல் சிகிச்சை கொடுக்கப்படும். இது தவிர, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, டார்கெட்டட் சிகிச்சை, இம்யூனோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்படும்.
தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன.. எவ்வாறான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.உணவு முறை என்றால் இந்த உணவு சாப்பிடலாம். அந்த உணவு சாப்பிடலாம். இதெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. எந்த உணவாக இருந்தாலும், பூச்சிக் கொல்லிகள் அதிகம் தெளிக்கப்பட்டு விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களை தவிர்த்துவிட்டு முடிந்தளவு ஆர்கானிக் உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
ஏனென்றால், பெரும்பாலான புற்றுநோய்கள் உருவாவதற்கு மரபணுவில் ஏற்படும் மாற்றங்களே காரணமாகிறது. இந்த மரபணு மாற்றம் ஏற்பட நாம் உட்கொள்ளும் உணவே பிரதானமாக இருக்கிறது. அதனால், முடிந்தளவு ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.அது முழுவதும் முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நாம் கடைகளில் இருந்து வாங்கிவரும் உணவுப் பொருட்களை அது பழங்களாகட்டும் அல்லது காய்கறிகளாகட்டும் அல்லது எந்தவித உணவு பொருளாகட்டும் ஒரு முறைக்கு பல முறை அலசி சுத்தப்படுத்திவிட்டு சமைக்கும்போது, காய்கறிகளிலோ, அரிசி போன்றவற்றில் இருக்கும் பூச்சிக்கொல்லியின் தீவிரம் குறைந்தபட்சம் 60முதல் 70 சதவீதம் வரை தவிர்த்துக் கொள்ள முடியும்.
சிலர் நினைக்கலாம். நான் உணவை நன்கு கொதிக்க வைத்து சமைத்து தானே சாப்பிடுகிறேன். இதனால் பூச்சிகள் இறந்துவிடுமே என்று. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நாம் உணவை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள பூச்சிகள் தான் சாகுமே தவிர, பூச்சிக் கொல்லி மருந்துகளின் ரசாயனங்கள் அதிலேயேதான் இருக்கும். அது சாகாது. எனவே, முடிந்தளவு நன்கு அலச வேண்டும்.
காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை தண்ணீரில் சிறிதளவு உப்பு அல்லது சோடா உப்பு போன்றவற்றை சேர்த்து சிறிது நேரம் வைத்துவிட்டு பின்பு எடுத்து பயன்படுத்துங்கள்.
இதில் இன்னொரு விஷயம் என்று பார்த்தால், நாம் அருந்தும் தண்ணீரும் கூட தற்போது சுத்தமானதாக இல்லை. இந்த அசுத்த தண்ணீரும், பூச்சிக் கொல்லிகளும், மண்வளத்தை மலடாக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, வரும்காலத்தில் இவை தீவிர பிரச்னையாக உருவெடுக்கும் அபாயம் இருக்கிறது.
அதனால், இவற்றையெல்லாம் தீவிர பிரச்னையாக கருத்தில்கொண்டு அரசாங்கம். கூடுமான வரை எல்லாவற்றையும் சரிசெய்ய முயல வேண்டும். அதுபோன்று ஆர்கானிக் உணவு
களின் உற்பத்திகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஆர்கானிக் விவசாயிகளை அதிகளவில் ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால், வரும் காலங்களில் மல்டிபிள் மைலோமா மட்டுமல்லாமல் மற்ற புற்றுநோய்களின் பாதிப்பும் மிகமிக தீவிரமான நிலையில் காணப்படும்.
ஏற்கெனவே, இந்தியா சர்க்கரை நோயில் முதலிடம் வகித்து வருகிறது. அதுபோன்று கிட்டதட்ட புற்றுநோய்களிலும் முதலிடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 20- 30 ஆண்டுகளில் சுமார் 300 சதவீதம் புற்றுநோய்கள் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் முழுக்க முழுக்க பூச்சிக் கொல்லியின் தீவிரமே. எனவே, அரசாங்கம் இதை தீவிர பிரச்சனையாக கருத வேண்டும். அதற்கான தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் காலத்தை காக்க வேண்டும்.