நன்றி குங்குமம் டாக்டர்
மூத்த மருத்துவர் கருவளம் & ஐவிஎஃப் ரம்யாஸ்ரீ பர்வதரெட்டி,
கருத்தரிக்க இயலாமையினால் (மலட்டுத்தன்மையினால்) உலகெங்கும் கடும் சிரமப்படுகிற இலட்சக்கணக்கான தம்பதியருக்கு பெற்றோராகும் நம்பிக்கையையும், வாய்ப்புகளையும் வழங்கியிருக்கிற ஒரு புரட்சிகர மருத்துவ செயல்முறையாக இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (ஐவிஎஃப்) எனப்படும் புறகருக்கட்டல் உருவெடுத்திருக்கிறது. இனப்பெருக்க தொழில்நுட்பத்தின், இயற்கையான வழிமுறைகள் பயனற்றதாக இருக்கும் நபர்களிடம் கருத்தரிப்பதை ஏதுவாக்குவதற்கென வடிவமைக்கப்பட்ட பல நுட்பமான படிநிலைகள் இதில் இடம்பெறுகின்றன.
1. சினைப்பைகளைத் தூண்டல்: ஐவிஎஃப் செயல்முறை என்பது, கருப்பைகளின் தூண்டுதலோடு வழக்கமாக தொடங்குகிறது. ஒரு மாதத்தில் ஒரே ஒரு முட்டை மட்டும் வழக்கமாக முதிர்ச்சியடைகிற இயற்கையான மாதவிடாய் சுழற்சிக்கு மாறாக ஒன்றுக்கும் மேற்பட்ட பல முதிர்ச்சியடைந்த கருமுட்டைகளை உருவாக்க சினைப்பைகளை தூண்டி கிளர்ச்சியூட்டுவதே இந்த காலகட்டத்தின் நோக்கமாகும். ஏறக்குறைய 10-14 நாட்கள் கால அளவின்போது வழங்கப்படும் ஹார்மோன் சார்ந்த மருந்துகள், சினைப்பைகளுக்குள் பல சுரப்பு
பைகளின் வளர்ச்சியையும் மற்றும் முதிர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன.
2. கருமுட்டை மீட்பு: முதிர்ச்சியடைந்த கருமுட்டைகளை உள்ளடக்கிய சுரப்பு பைகள் தயாராக இருக்கிறது என கருதப்படும்போது கருமுட்டை மீட்பு என அழைக்கப்படுகிற ஒரு சிறிய அறுவைசிகிச்சை செயல்முறை செய்யப்படுகிறது. நோயாளியின் சௌகரியத்தை உறுதி செய்ய உணர்விழப்பு மருந்து வழங்கியதற்கு பிறகு இச்செயல்முறை செய்யப்படுகிறது. சினைப்பைகளை அணுகுவதற்கும் மற்றும் சுரப்பு பைகளிலிருந்து கருமுட்டைகளை மீட்டெடுக்கவும் யோனி சுவர் வழியாக மெல்லிய ஊசி அல்ட்ராசவுண்டு இமேஜிங் வழிகாட்டலின் கீழ் உட்செலுத்தப்படுகிறது.
3. விந்து சேகரிப்பு மற்றும் தயாரிப்பு: இதே நேரத்தின்போது அப்பெண்ணின் ஆண் இணையிடமிருந்து (தேவைப்படும் நேர்வுகளில் விந்து தானமளிப்பவரிடமிருந்து) விந்து சேகரிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. சேகரிக்கப்பட்ட விந்து மாதிரியிலிருந்து, ஆரோக்கியமான, நகர்வுத்திறன் கொண்ட விந்து ஆய்வகத்தில் பிரித்தெடுக்கப்பட்டு கழுவப்படுகிறது மற்றும் கருவூட்டல் செய்வதற்காக தயார் செய்யப்படுகிறது.
4. கருக்கட்டல்: ஆய்வகத்தில், எடுக்கப்பட்ட கருமுட்டைகள் மற்றும் தயார் செய்யப்பட்ட விந்துவும், கருக்கட்டலை ஏதுவாக்குவதற்காக ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஒன்று சேர்க்கப்படுகின்றன. இதற்கு இரண்டு முதன்மையான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
*மரபுசார்ந்த ஐவிஎஃப்: இயற்கையான கருக்கட்டல் நிகழ்வதை ஏதுவாக்க ஒரு நுண்வளரி (கல்ச்சர்) கொள்கலனில் கருமுட்டைகளும், விந்துவும் ஒன்றாக சேர்த்து வைக்கப்படுகின்றன.
*இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி (ICSI): கருக்கட்டலை சாத்தியமாக்க ஒவ்வொரு முதிர்ச்சியடைந்த கருமுட்டைக்குள்ளும் ஒரு ஒற்றை விந்தணுவை நேரடியாக உட்செலுத்துவது இந்த உத்தியில் இடம்பெறுகிறது; ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இருக்கும் நேர்வில் இது குறிப்பாக பயனளிப்பதாக இருக்கும்.
5. கரு வளர்ப்பு: கருக்கட்டலை தொடர்ந்து, ஆய்வகத்திற்குள் ஒரு சிறப்பு இன்குபேட்டரில் (அடைகாக்கும் கருவி) கருக்கள் வளர்க்கப்படுகின்றன. மனித உடலுக்குள் இருக்கும் அதே சூழ்நிலைகளை போலவே இருப்பதற்காக இந்த இச்சூழலானது மிக கவனமாக கட்டுப்படுத்தப்படும். செல் பிரிப்பின் முக்கியமான நிலைகளின் வழியாக வளர்கருக்கள் உருவாக்கவும் மற்றும் முன்னேற்றம் காணவும் இது அனுமதிக்கும்.
6. வளர்கரு மாற்றுகை: பல நாட்கள் வளர்ச்சி நிலை இருந்ததற்கு பிறகு, வழக்கமாக மீட்புக்கு பிறகு 3-5 நாட்கள், கால அளவில் பெண்ணின் கருப்பைக்குள் மாற்றுவதற்காக ஆரோக்கியமான ஒரு அல்லது இரண்டு வளர்கருக்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த வளர்கரு மாற்றுகை செயல்முறை எளிதானது; பெண் பிறப்புறுப்பு பகுதி மீதான பரிசோதனை போன்ற இதில், வளர்கருக்களை உள்ளடக்கிய ஒரு கதீட்டர் கருப்பை வாய் வழியாக கருப்பை குழிக்குள் மிக கவனமாக உட்செலுத்தப்படுகிறது.
7. கருத்தரிப்புக்கான சோதனை: வளர்கரு மாற்றுகை செய்யப்பட்டதற்கு சுமார் 2 வாரங்கள் கழித்து, கருப்பதியமும் மற்றும் கருத்தரிப்பும் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்கிறதா என்று தீர்மானிக்க கருத்தரிப்புக்கான பரிசோதனை செய்யப்படுகிறது. கருத்தரிப்பு நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறவாறு இரத்தம் அல்லது சிறுநீரில் மானுட கோரியானிக செனிப்பி வளர்ப்பியின் (hCG) அளவுகளை இச்சோதனை மதிப்பீடு செய்கிறது.
இனப்பெருக்க மருத்துவத்தில் இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (ஐவிஎஃப்) என்பது, கருத்தரிக்க இயலாமையினால் கடும் போராட்டத்தை எதிர்கொள்கிற தனிநபர்கள் மற்றும் தம்பதியினருக்கு நம்பிக்கையையும், பெற்றோராவதற்கான சாத்தியங்களையும் வழங்குகிறது. இச்செயல்முறையின் ஒவ்வொரு படிநிலையிலும் துல்லியமான அக்கறையுடன் நவீன உத்திகளை பயன்படுத்துவதன் வழியாக வெற்றிகரமான கருத்தரிப்பை அடைவதற்கான பயணத்தில் பெற்றோர்களாகும் நம்பிக்கையுடன் இருக்கும் நபர்களுக்கு ஐவிஎஃப் தொடர்ந்து திறனதிகாரத்தை வழங்கி வருகிறது.