திருச்சி: திருச்சி அருகே கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியில் வைத்திருந்த ரூ.42 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மார்க்கெட்டுக்கு நேற்றுமுன்தினம் வந்தனர். லாரியை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த்(40) ஓட்டினார். மொத்த காய்கறி விற்பனை நிறுவன கேஷியர் லோகேஷ்வரன் (22) உடன் வந்தார்.
காய்கறிகளை கும்பகோணத்தில் இறக்கிய பின், ரூ.42 லட்சத்தை வசூலித்தனர். இதை ஒரு பேக்கில் போட்டு டிரைவர் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தனர். பின்னர் லாரியில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் புறப்பட்டனர். திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே காவல்காரபாளையத்தில் இரவில் லாரியை நிறுத்தி டீ குடித்தனர். அப்போது திருச்சியில் இருந்து காரில் வந்த 5 பேர் திடீரென அங்கு நிறுத்தினர். அதிலிருந்து 2 பேர் இறங்கி லாரியில் ஏறி பணம் இருந்த பேக்கை எடுத்தனர்.
உடனே டிரைவர் ஆனந்த், கேஷியர் லோகேஸ்வரன் மற்றும் டீக்கடையில் இருந்த இருவர் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது 3 பேர் பட்டா கத்தியை காட்டி மிரட்டிவிட்டு பணப்பையுடன் காரில் தப்பிச்சென்றனர். புகாரின்படி ஜீயபுரம் போலீசார் அந்த வழியாக வந்த கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் கொள்ளையர்கள் சிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கும்பலை தேடி வருகின்றனர்.