சென்னை: ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு உதவி கமிஷனர்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, ‘இனி கத்தியை கையில் எடுத்தால்… சரியான பாடம் புகட்டப்படும்’ என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை பெருநகர காவல்துறையில் போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு, ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகைளில் சென்னை பெருநகர காவல் எல்லையில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை வழக்குகளின் வீரியத்தின் படி அவர்கள் தரம் பிரித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் ஏ-பிளஸ், ஏ, பி. மற்றும் சி கேட்டகிரி என 4 பிரிவுகளாக ரவுடிகளை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை முழுவதும் ஏ- பிளஸ் கேட்டகிரியில் மொத்தம் 100க்கும் ரவுடிகள் என 4 கேட்டகிரிளிலும் மொத்தம் 6 ஆயிரம் ரவுடிகள் உள்ளனர்.
அவர்களில் 700க்கும் மேற்பட்டோர் தற்போது சிறையில் உள்ளனர். மீதமுள்ள ரவுடிகள் நீதிமன்ற மூலம் ஜாமீனி மற்றும் சில வழக்குகளில் தலைமறைவாகவும் உள்ளனர். போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற உடனே கூடுதல் கமிஷனர்களுக்கு ரவுடிகள் பட்டியலின் படி உடனே அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் கமிஷனர்கள் ரவுடிகள் மற்றும் அவர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்த முழு விபரங்களை அறிக்கையாக அளித்தனர்.
அதைதொடர்ந்து கடந்த வாரம் கமிஷனர் அருண் சென்னை பெருநகரில் உள்ள அனைத்து காவல் மாவட்ட துணை கமிஷனர்கள், இணை கமிஷனர்களை நேரில் அழைத்து மாவட்ட வாரியாக ரவுடிகளின் பட்டியலின் படி உடனே சம்பந்தப்பட்ட ரவுடிகளின் வீடுகளுக்கு உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று சம்பந்தப்பட்ட ரவுகள் இருக்கிறார்களா என்று உறுதி செய்து ரவுடிகளிடமோ அல்லது அவர்களின் குடும்பத்தாரிடமோ கையெழுத்து வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை தொர்டர்ந்து சென்னை பெருநகர் காவல் எல்லையில் அந்தந்த துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெட்கர்கள் கடந்த 3 நாட்களாக ரவுடிகளின் பட்டியலின் படி, நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். சில ரவுடிகள் தங்களது இருப்பிடத்தை போலியாக காவல் நிலையங்களில் கொடுத்துள்ளதும் நேரடி விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அப்படி போலியான முகவரிகளை கொடுத்த ரவுடிகளின் பட்டியலின் படி தனிப்படையினர் அவர்களின் இருப்பிடம் குறித்து விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அதிரடி சோதனையின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு ரவுடிகளை அவர்களின் குடும்பத்தினரிடம் ஓரிரு நாளில் சம்பந்தபட்ட ரவுடி காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் பகுதியில் உதவி கமிஷனர் தலைமையில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை இன்ஸ்பெக்டர் ஆகியோர் குழுவாக ரவுடிகளின் பட்டியலின் படி, சம்பந்தப்பட்ட ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களல் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் உதவி கமிஷனர் கொலை குற்றங்களில் ஈடுபட்ட ரவுடி ஒருவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துகிறார். அப்போது, ‘இனி குற்றங்களில் ஈடுபட கூடாது, கவனமாக இருக்க வேண்டும். இவனால எந்த பிரச்னை என்றாலும் என்னிடமோ அல்லது இன்ஸ்பெக்டரிடமோ சொல்லனும். அப்புறம் நாங்க நடவடிக்கை எடுத்துக்குவோம். இவன் போய் ஏதாவது செய்து வம்பில் மாட்டிக்க கூடாது. வேறு ஏதாவது கத்தியை எடுத்துவிட்டால், கை கால்களை உடைத்துவிடுவோம். புரிகிறதா…
இல்ல வேற ஏதாவது கொலையில் ஈடுபட்டால் அப்புறம் அவர்கள் பாணியில் நாங்கள் செய்திடுவோம்…. இனி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடாமல் ஒழுக்கமாக இருக்கனும். அவன் வந்ததும் ஸ்டேசனுக்கு வந்து பார்க்க சொல்லுங்க. பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள்’ என்று முழுமையான தகவலகளை சேகரித்து செல்கின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.