சென்னை: அதிமுக முன்னாள் எம்பியும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கே.மலைச்சாமி (87) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். தமிழக உள்துறை செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தொழிலாளர் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் என அரசின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.மலைச்சாமி ஐஏஎஸ். இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் காலமானார். ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அதிமுகவில் இணைந்து, 1999ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
அதன் பின்னர் 2004ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு உறுப்பினராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் அஞ்சலிக்காக அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.