Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேகேஆருக்கு எதிராக முகுல் சவுத்ரி அதிரடியில் அசத்தல்; வெற்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை!: லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் நெகிழ்ச்சி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த15வது லீக்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 45, கேப்டன் ரகானே 41, ரோவ்மன் பவல் 39, கேமரூன் கிரீன் 32 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 15, மார்க்ரம் 22, கேப்டன் ரிஷப் பன்ட் 10 ரன்னில் அவுட் ஆகினர்.

இம்பாக்ட் பிளேயராக வந்த ஆயுஷ் படோனி 34 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன் எடுக்க நிகோலஸ் பூரன் 13 ரன், அப்துல் சமத் 2 ரன்னில் அவுட் ஆகினர். கடைசி 2 ஓவரில் 30 ரன் தேவைப்பட்ட நிலையில், கேமரூன் கிரீன்வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 16 ரன் விளாசினார். அரோரா வீசிய கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட முதல் பந்தில் ஆவேஷ்கான் ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தில் சவுத்ரி சிக்சருக்கு தூக்கினார். 3 மற்றும் 4வது பந்து டாட் பாலாக, கடைசி 2 பந்தில் 7 ரன் தேவைப்பட்டது. 5வது பந்தில் சவுத்ரி மீண்டும் ஒரு சிக்சர் அடித்தார். இதனால் ஸ்கோர் சமன் ஆக, கடைசி பந்தில் ‘பைசாக’ ஒரு ரன் ஓடினர். முடிவில் 20 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்த லக்னோ 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.நாட்அவுட்டாக 27 பந்தில் 7 சிக்சர், 2 பவுண்டரியுடன் 54ரன் விளாசிய முகுல்சவுத்ரி ஆட்டநாயகன் விருது பெற்றார். 3வது போட்டியில் லக்னோ 2வது வெற்றியை பெற்றது. கேகேஆர் 4வது போட்டியில் 3வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் கூறியதாவது:\”வலைப்பயிற்சியில் முகுல் சவுத்ரி சிறப்பாக ஆடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் அதனை ஒரு இக்கட்டான போட்டியில் அப்படியே செயல்படுத்தி காட்டிய விதம் ஆச்சரியமாக உள்ளது. இந்த வெற்றியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். ஒரு கேப்டனாகவும், நிர்வாகமாகவும் ஒரு வீரர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த நம்பிக்கை தான் ஒரு வீரரை அற்புதங்களைச் செய்யத் தூண்டுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் பொறுப்பேற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது, அணியின் பலத்தை காட்டுகிறது. ஆயுஷ் படோனி அணியின் சீனியர் வீரராக மாறிவிட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினார். முகமது ஷமியின் அனுபவம் விலைமதிப்பற்றது. அவர் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். ஒட்டுமொத்த பந்துவீச்சு பிரிவும்சிறப்பாகச் செயல்பட்டது, என்றார்.

எனது கிரிக்கெட் பயணம் நான் பிறக்கும் முன்பே தொடங்கிவிட்டது: ஆட்டநாயகன் முகுல் சவுத்ரி பேட்டி; ராஜஸ்தானை சேர்ந்த 21 வயதான முகுல் சவுத்ரியை லக்னோ ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. நேற்று அவர் 7 சிக்சர் விளாசி அணியை வெற்றிபெற வைத்து சிறந்த பினிசராக மாறி இருக்கிறார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறியதாவது: ”நிஜத்தைச் சொல்லப்போனால் எனது கிரிக்கெட் பயணம் நான் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது. தனது மகன் ஒருநாள் பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்பது எனது தந்தையின் தீராத கனவு. ஆனால் அப்போது குடும்பத்தின் பொருளாதார நிலை அவ்வளவு சீராக இல்லை. அதனால் சிறு வயதிலேயே கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்க முடியவில்லை. 12 வயதில் தான் நான் விளையாடவே ஆரம்பித்தேன். கடைசி நேரத்தில் பேட்டிங் செய்யும் போது நிச்சயம் அழுத்தம் இருக்கும். ஆனால் கடவுள் கொடுத்த வாய்ப்பாகவே இதனைப் பார்க்கிறேன். அழுத்தத்தை விட எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பையே நான் பெரிதாக நினைக்கிறேன்.இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் என்னால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை. அதனால் இன்று அடித்த முதல் சிக்சர் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. அதன் பிறகு அடித்த ஹெலிகாப்டர் சிக்சரும் நன்றாக இருந்தது. சிறு வயது முதலே அதிரடியாக விளையாடுவது தான் எனக்குப் பிடிக்கும். எம்.எஸ்.டோனி சிறந்த பினிஷர். நானும் அதே வரிசையில் பேட் செய்வேன். என் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் எனக்கு உத்வேகம் அளித்தார். நான் ஆட்டத்தை முடித்து, அதை அவருக்கே அர்ப்பணிப்பேன்” என்றார்.

தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம் தான்; தோல்வி குறித்து கேகேஆர் கேப்டன் ரகானே கூறியதாவது: ”இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம் தான். ஆனால் எங்கள் வீரர்கள்ஆடிய விதத்தை எண்ணி பெருமைப்படுகிறேன். 18வது ஓவர் வரை ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் கடைசி 2 ஓவரில் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த முடியாமல் போனது கிரிக்கெட்டில் சகஜம் தான். முகுல் சவுத்ரியின் இன்னிங்ஸ் தான் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்தது. அவர் ஆடிய ஷாட்கள் அனைத்தும் மிகவும் துணிச்சலானவை. அவரது ஆட்டம் பிரமிக்க வைத்தது. இந்த ஆடுகளத்தில் 180 - 185 ரன் நல்ல ஸ்கோர் தான். எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். பீல்டிங்கில் ஓரிரு தவறுகள் நடந்திருக்கலாம், மற்றபடி பந்துவீச்சாளர்கள் மீது குறையில்லை” எனக் கூறினார்.

பிட்ஸ். பிட்ஸ்..

* கேகேஆருக்கு எதிராக 7வது போட்டியில் லக்னோ 5வது வெற்றியைபெற்றது. இதில் ஈடன்கார்டனில் ஆடிய 4 போட்டியில் 3ல் வென்றுள்ளது.

* சேசிங்கில் லக்னோ கடைசி பந்தில் வெற்றிபெறுவது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2023ல் ஆர்சிபிக்கு எதிராக 213 ரன் இலக்கை துரத்தியபோது கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

* சேசிங்கில் 8வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பில் நேற்று சவுத்ரி-ஆவேஷ் கான் 54ரன் எடுத்தது தான் ஐபிஎல்லில் அதிகபட்சமாகும்.