Wednesday, February 21, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் சிங்க் எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப்போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். அதன்பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும்.சமையலறைக் குப்பைக்கூடையை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இந்தக் குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைப்பது பலன் தரும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும். பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஸ்பான்ச், கிருமிகள் தங்கும் இடம். அதன் ஒரு சதுர இன்ச் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். எனவே, ஸ்பான்ச்சில் உள்ள ஈரப்பதத்தால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும் கிருமிகள் உருவாகலாம். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பான்ச்சை மாற்றிவிட வேண்டும்.

அல்லது ப்ளீச்சிங் தூள் கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் ஒழிந்துவிடும்.கேஸ் அடுப்பை எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க… அடுப்பிலும் சமையல் மேடையிலும் திரவசோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன்பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாகத் துடைத்தால், அடுப்பு, மேடை இரண்டுமே பளிச்சென ஆகிவிடும்.சமையல் மேடையின் எண்ணெய்ப் பிசுக்கை போக்க கடலைமாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் பிசுக்கு போகும்.வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற அதிக நாட்கள் இருக்கக்கூடிய பொருட்களை தனித்தனியாக பிரம்புக் கூடைகள் அல்லது அட்டைப் பெட்டிகளில் போட்டு வைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுவிடும். கண்ணாடிப் பாத்திரங்களை உப்பும் வினிகரும் கலந்த கலவையைக் கொண்டு சுத்தம் செய்யலாம். உப்பு ஜாடியில் சிறிதளவு சோளமாவைப் போட்டு வைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.கிச்சன் மேடையின் அடியில் இருக்கும் கபோர்டில் வைக்கும் பொருட்களிலும் கவனம் தேவை. சிறிய, பெரிய ஸ்பூன்களை தனித்தனியாக வைக்கவும். அவைகளுக்கென்றே கடையில் கிடைக்கும் ஸ்டாண்டை வாங்கி வைத்து அதில் கரண்டிகளை வைத்துக்கொள்ளலாம். பார்க்க அழகாகவும், எடுத்து பயன்படுத்த சுலபமாகவும் இருக்கும். – பொ. பாலாஜிகணேஷ்.

தோசை சுடும்போது சிறிதளவு சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறுமொறுப்பாக வரும்.வாழைப்பழத்தின் காம்புப் பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைத்தால், நான்கு நாட்கள் வரை கறுக்காமல் அப்படியே இருக்கும்.
கறிவேப்பிலை காய்ந்துவிட்டால் அதனை தூக்கி எறிந்துவிடாமல் இட்லிப் பானையின் அடியில் உள்ள தண்ணீரில் கறிவேப்பிலையைப் போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.கிழங்குகளை சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சைமிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும்.தயிர்வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம் தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால் மணம், சுவை நிறைந்ததாக இருக்கும்.

விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராப்பூந்தி இவற்றையும் மேலே தூவலாம். வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப்போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில் வேகவைத்து எடுத்து சமையலில் பயன்படுத்தினால், பூ கறுக்காமல் இருக்கும்.தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசி கூடும். தொண்டை கட்டிக்கொண்டால், கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.அதிகளவு பாலாடை தேவைப்பட்டால், கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும். சிறிது நேரத்திலேயே அதிகளவு பாலாடை தோன்றிவிடும்.கறிவேப்பிலை, கொத்துமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.
வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும்போது வழுவழுப்பாக இருக்கும். அதைத் தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உரித்த பிறகு, அதை ஃப்ரிஜில் 2-3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன்பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனித்தனியாகவும் மொரமொரப்பாகவும் இருக்கும். பச்சைமிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும். – பா.கவிதா.

 

You may also like

Leave a Comment

10 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi