Thursday, February 22, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

* கேரட், பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே கொஞ்சம் மில்க்மெய்ட் ஊற்றிக் கிளறினால் அல்வா நன்கு மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
* அடைமாவுடன் சிறிதளவு கார்ன் பிளேக்ஸை கலந்து செய்தால் அடை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* ஒரு அச்சுவெல்லத் துண்டை நெய் ஜாடியில் போட்டு வைத்தால் நெய்யின் ருசியும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.
* ரசத்திற்கு தாளிக்கும்போது, சிறிதளவு நெய் சேர்த்து தாளித்தால் ரசம் நன்கு மணத்துடன் இருக்கும்.– கே. ராகவி, வந்தவாசி.
* சப்பாத்தி மாவில் வெந்தயக்கீரை சேர்த்து பிசைவது போன்று புதினா, கொத்துமல்லி இலைகளையும் பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிகவும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* சூப்புகள் தயாரிக்கையில், அவற்றில் 2 தேக்கரண்டி பார்லி வாட்டரைக் கலந்து அருந்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
* மிக்சியில் பொடித்த பொடிவகைகளை வாய் குறுகலான பாட்டிலில் கொட்டும்போது ஒரு பேப்பரை பாட்டில் வாயில் நிற்க வைத்து மிக்சியில் இருந்து பேப்பரின் மேல் கொட்டினால், கீழே சிந்தாமல் சுலபமாகக் கொட்டி வைக்கலாம்.
* சுண்டைக்காயைக் கீறி நன்றாக எண்ணெயில் வதக்கி, உப்பு, மிளகாய்ப்பொடி, பெருங்காயப்பொடி தூவி எலுமிச்சைச் சாறு பிழிந்து, கடுகு தாளித்துக் கொட்டினால் ஊறுகாய் ரெடி. உடனேயே சாப்பிடலாம்.
* மிக்சியின் பிளேடுகள் மழுங்கிவிட்டால் ஒருபிடி கல் உப்பைப் போட்டு ஓடவிட்டால் பிளேடு கூராகிவிடும்.
* பால் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் சுக்குப்பொடி சேர்த்து விட்டால் ஜீரணக் கோளாறு வராமல் தடுக்கும்.- இந்திராணி தங்கவேல், சென்னை.
* முட்டையை வேக வைக்கும்போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் முட்டை உடைந்து போகாது.
* தோசை வார்ப்பதற்கு முன்பு, தோசைக்கல்லில் கத்தரிக்காயை நறுக்கித் தேய்த்தால், தோசை எளிதாக வார்த்து எடுக்க வரும்.
* தேங்காயை உடைத்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்து துருவினால் துண்டு விழாமல் துருவல் நன்றாக வரும்.
* வெள்ளரிக்காய், கேரட், மாங்காய், பூசணிக்காய் இவற்றின் தோலைத் தடிமனாக நறுக்கினால், அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும்.
* சமையலில் ஒருபோதும் சோடா பவுடர் சேர்க்கக்கூடாது. உணவில் இருக்கும் சத்துக்களை அது அழித்துவிடும்.
* உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறிது புதினா சேர்த்துக்கொண்டால் கிழங்கில் மண்வாசனை இருக்காது. அதன்பிறகு, குழம்பில் சேர்த்துக் கொண்டால் மணமும், ருசியும் கூடும்.
* மோர் கலந்த நீரில் கத்தரிக்காயைப் போட்டு வைத்தால் கத்தரிக்காய் கருத்துப் போகாது.
* வெந்தய இலை அதிகமாக இருந்தால் நறுக்கி, எண்ணெயில் வதக்கி, பாட்டிலில் அடைத்து, ஃப்ரீஸரில் வைத்துவிட்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
* உருளைக்கிழங்குடன் ஒன்றிரண்டு ஆப்பிளைப் போட்டு வைத்தால் உருளைக்கிழங்கு எளிதில் கெட்டுப்போகாது. முளை விடாது.
* பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிக நேரம் வேக வைத்தால் அதில் உள்ள சத்துக்கள் போய்விடும்.
* அரிசியை ஒன்றிரண்டு முறை களைந்தால் போதும். அதிக தடவை கழுவினால் அதில் இருக்கும் சத்துக்கள் போய்விடும்.
* காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கிச் சமைத்தால் சத்துக்கள் அதிக அளவில் வீணாகிவிடும்.
* வெள்ளைப் பூண்டையோ, சுக்குத் துண்டையோ தானிய டப்பாவில் போட்டு வைத்தால், வண்டுகள், பூச்சிகள் அண்டாது.- அமுதா அசோக்ராஜா, திருச்சி.
* வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
* பக்கோடா செய்யும்போது மாவில் சிறிது ரவை கலந்து செய்தால், மொறு மொறுவென்று சுவையாக இருக்கும். ரவைக்குப் பதில் வேர்க்கடலையைப் பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம்.
* கலந்த சாதம் கிளறுவதற்கு சாதத்தை ஆற வைக்கும்போது, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஆறவைத்தால் சாதம் உதிராக வரும்.- இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.
* கொத்தமல்லி இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல், காற்று புகாத டப்பாவில் வைத்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
* உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
* சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
* காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
* அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக வளரும்.– கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

You may also like

Leave a Comment

eleven − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi