நன்றி குங்குமம் தோழி
* பாதுஷா செய்யும்போது மாவில் கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிகவும் மிருதுவாக இருக்கும்.
* போளி தட்டும்போது, பூரணத்தை உருட்டி வைத்தபின், அதை வடை போல தட்டையாக தட்டி வைத்தால், மாவால் மூடும்போது பூரணத்தின் மேற்புறமும், கீழ்ப்புறமும் மாவு சமமாக இருக்கும்.
* சீடை, தட்டை, முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்யும்போது சிறிது தேங்காய்ப்பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* தேங்காய் பர்பிக்கு பாலுக்குப் பதில் பால் பவுடர் சேர்த்தால் பர்பி நல்ல வெள்ளை நிறமாக இருக்கும்.
– ஆர்.கீதா, கேரளா.
* அதிரசம் செய்யும் போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழத்தை சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* இனிப்புகள் தயாரிக்கும் போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தினால் சுவை அதிகமாக இருக்கும்.
* முறுக்கு வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டும் என்றால் அரிசி ஒருபடி என்றால் கால்படி அளவு உளுத்தம் பருப்பு போட வேண்டும். உளுத்தம் பருப்பை வறுத்து போட வேண்டும்.
– எம்.ஏ.நிவேதா, திருச்சி.
* முறுக்கு, சீடை, தேன்குழல் செய்யும்போது அரிசி, உளுந்து மாவுடன் சிறிது ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து சேர்த்து பிழிந்து சுட்டால் மொறுமொறுவென ருசியுடன் வாசனையாக இருக்கும்.
* ரிப்பன் பக்கோடா செய்யும்போது அரிசிமாவு, கடலைமாவு, 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு கலந்து பிசைந்து சுட்டால் பக்கோடா மொறு மொறுவென சுவையாக இருக்கும்.
* லட்டு, அல்வா, பாதுஷா இனிப்பு வகைகளில் ஜீரா பூக்காமல் இருக்க பாகில் ½ மூடி எலுமிச்சம்பழம் பிழிய பூக்காது.
* ரவா லட்டு பிடிக்கும் போது வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவும். சர்க்கரையையும் மிக்ஸியில் அதே அளவு நைசாக அரைத்து இரண்டையும் சேர்த்து நெய்விட்டு பிடித்தால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.
– எம். வசந்தா, சென்னை.
* தேங்காய் பர்பி சில சமயங்களில் பதம் தவறி முறுகிவிடும். அப்போது அதை பாலில் ஊறவைத்து மறுபடியும் கிளறி, இறக்கும் சமயம் நெய்யில் வறுத்த கடலை மாவைத் தூவி இறக்க, சரியான பதம் வந்து விடும்.
* காராபூந்தி செய்யும் போது பச்சரிசி சேர்க்கையில் சிறு தானிய அரிசி மாவு (வரகு, சாமை) சேர்க்க சுவையோடு சத்து சேரும்.
* எந்த வகை ஸ்வீட் செய்த பின்னர் அதன் மேல் சில்வர் பாயில், குங்குமப் பூ, தேங்காய் சீவல் கலராக உள்ளதை தூவி அலங்கரிக்க நன்றாக இருக்கும்.
* எசென்ஸை சேர்க்கும்போது கடைசியாக சில துளிகள் ேசர்த்தால் நன்றாக இருக்கும். நிறைய சேர்த்து விட்டால் கசந்து விடும்.
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
* நாடா பக்கோடா செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவுடன் இரண்டு டீஸ்பூன் உளுந்து மாவையும் சேர்த்துச் செய்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது. கூடுதல் கரகரப்பாக இருக்கும்.
* மைசூர்பாகு செய்யும்போது தேவையான அளவு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சூடான நெய் ஒரு கரண்டியை தாராளமாக விட்டுக் கலக்க வேண்டும். கூடவே சர்க்கரைப்பாகில் ஏலக்காயையும் பொடி செய்து போட்டுவிட்டால் கட்டி கட்டியாக கல்போல ஆகாது.
* குலோப் ஜாமூன் செய்யும்போது டால்டாவோ அல்லது நெய்யோ லேசாக சூடானால் போதும். பிசைந்து உருட்டின மாவைப் போட்டு பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.
* ஜாங்கிரி செய்த பிறகு அதன்மீது கலர் தேங்காய்த் துருவலைத் தூவி விருந்தினர்களுக்கு கொடுத்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
தீபாவளி லேகியம்
தேவையானவை:
ஓமவல்லி இலை – 10,
துளசி இலை – 10,
இஞ்சி – 1 துண்டு,
லவங்கம் – 3,
நெய் – 2 டீஸ்பூன்,
மிளகு – 10,
தேன் – சிறிதளவு.
செய்முறை : மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை சேர்த்து, அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆறவைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு நல்லது.
– பா.கவிதா, சிதம்பரம்.
கேழ்வரகு பர்பி
தேவையானவை:
ராகி மாவு – 1 கப்,
ரவை – ¼ கப்,
வெல்லம் – 1 கப்,
நெய் – தேவையான அளவு,
முந்திரி – தேவையான அளவு,
ஏலக்காய் தூள் – சிறிதளவு,
செய்முறை: ஒரு அடி கனமான வாணலியை சூடுபடுத்திக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் அதில் 1 கப் கேழ்வரகு மாவினை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ¼ கப் ரவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய வெல்ல கரைசலை கேழ்வரகு மாவுடன் சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்து விடவும். கட்டிகள் எதுவும் இல்லாமல் குறைவான தீயில் வைத்து கலந்து விடவும்.
வெல்ல கரைசலில் கேழ்வரகு மாவும், ரவையும் வெந்து வரும் வரை நன்கு கலந்து விடவும். மாவு நன்கு வெந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கலந்து விடவும். பின்னர் ஏலக்காய் தூள், முந்திரி சேர்த்து கிளறி ஒரு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும். சிறிது சூடு ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறினால் சுவையான சத்தான கேழ்வரகு பர்பி ரெடி.