* முட்டைக்கோஸை வதக்கும்போது சிறிது பால் சேர்த்து வதக்கினால், பொரியல் வெள்ளை வெளேர் என்றிருக்கும். சுவையும் கூடும்.
* பாலித்தீன் கவரில் பச்சைத் தக்காளிகளுடன் ஒரு பழுத்த தக்காளியையும் போட்டு வைத்தால் எல்லாப் பழங்களும் பழுத்துவிடும்.
* கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு சேனைக் கிழங்கை நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்படாது.
* தேயிலை பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் டீ குடிக்கும்போது மணமாக இருக்கும்.
* சப்பாத்தி, அடை போன்றவற்றை ஹாட் பேக்கில் வைக்கும்போது, ஸ்பூன் இரண்டைப் போட்டு அதன் மீது அடுக்கி வைத்தால் கடைசியில் உள்ளது ஆவியில் நனைந்து போகாமல், நசநசப்பு இல்லாமல் இருக்கும்.
* பெருங்காயம் கட்டிப் போல் ஆகாமல் இருக்க அது உள்ள டப்பாவில், காம்பு இல்லாத ஒரு பச்சை மிளகாய்ப் போட்டு விட்டால் பெருங்காயம் இளகி பஞ்சுபோல் மிருதுவாகிவிடும்.
* அப்பளத்தை உளுந்து டப்பாவில் போட்டு வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.
* பாலை உறை ஊற்றும்போது அதில் சிறிது அரிசிக் கஞ்சியை ஊற்றி வைத்தால் மிகக் கெட்டியான தயிர் கிடைக்கும்.
* எந்த மாவு அரைத்தாலும் வீட்டுக்கு வந்தவுடன், பரவலாகக் கொட்டி, சூடு ஆற வைத்த பிறகுதான் டப்பாவில் கொட்டி வைக்க வேண்டும். சூட்டோடு கொட்டி வைத்தால், ஆவியில் தண்ணீர்விட்டு, மாவு ஈரமாகி மாவு சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.
* சர்க்கரைப் பாத்திரத்தில் நான்கு கிராம்புகளைப் போட்டு வைத்தால் எறும்பு வராது.
* குண்டூசிகளைப் போட்டு வைக்கும் டப்பாவில் சிறிது சாக்பீஸ் தூளைப் போட்டு வைத்தால் குண்டூசி துருப்பிடிக்காது.– எம்.ஏ.நிவேதா.
* பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் இயல்பான நிறம் மாறாமலிருக்கும்.
* உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இரண்டாக உடையாது.
* புதிய எவர்சில்வர் பாத்திரமென்றால் சிறிது சூடாக்கினால் போதும். அதில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரும் பசையும் நீங்கிவிடும்.
* கேக், பிஸ்கட் போன்றவற்றில் பதிக்கும் முந்திரி, செர்ரி பழம் விழாமலிருக்க பாலில் முக்கி அழுத்தவும்.
* தேங்காய்பால் திரிந்து போகாமல் இருக்க, அதில் சிறிது தண்ணீரில் மக்காச்சோள மாவைக் கலக்கி ஊற்றி கலந்தால் போதும்.
* ஆப்ப மாவு கலக்கும்போது, ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்தால் ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.
* ரவா இட்லி செய்யும்போது சிறிது சேமியாவை வறுத்து ரவையுடன் தயிரில் ஊற வைத்து செய்தால் ருசியாக இருக்கும்.– அண்ணா அன்பழகன்.
* ரவை, கோதுமை மாவு, அரிசிமாவு போன்றவற்றை கலந்து கரைத்த தோசை செய்யும்போது மிளகாய், கறிவேப்பிலை (விருப்பப்பட்டால் ஒரு நறுக்கிய வெங்காயம்) ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, அதில் கடுகு தாளித்து, மாவு வகைகளை சேர்த்துக் கரைத்து, தோசை வார்த்தால் அருமையான சுவையுடன் இருக்கும்.
* சாம்பார் பொடியை அரைத்து வந்ததும் ஆறவிட்டு, டப்பாவில் அடைக்கும் முன்பு சிறிது விளக்கெண்ணெய் விட்டு, கரண்டியால் பிசறி டப்பாவில் அடைத்து வைத்தால், ஒரு வருடம் வரை கூட கெடாது. பூச்சி விழாது.
* சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு சிறிதளவு புதினாவை பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால், சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.
* தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்கு சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியிலுள்ள சேஃப்டி வால்வையும் சரிபார்ப்பது நல்லது. இப்படி செய்து வைத்தால் காலை அவசரத்தில் பிரச்னைகள் வராமல் சமைக்கலாம்.
* கேஸ் அடுப்பு ஒரு பக்கம் எரிந்துகொண்டு இருக்கும்போதே, மற்ற பாகங்களைத் துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. ஸ்டவ் எரியாமல் இருக்கும்போது, கேஸ் சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும்
– இரா. அமிர்தவர்ஷினி
* அப்பம் செய்யும் மாவில் சிறிதளவு உருக்கிய நெய் கலந்து செய்தால் நெய் வாசத்துடன் அப்பம் மணக்கும்.
* சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு எந்தப் பொரியலிலும் இறுதியாகத் தூவி இறக்கினால், மணமும் சுவையும் கூடும்.
* இட்லி பூப்போல வர, 5 பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து சேர்த்து ஊறவைத்து அரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். இட்லி ஊற்றும்போது கரண்டியை பாத்திரத்தின் அடிவரை விட்டு கலக்காமல், மேலாக மாவை எடுத்து ஊற்றினால், இட்லி பூப்போல இருக்கும்.
* ரவாலட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 தேக்கரண்டி பால் பவுடரையும் கலந்து டேஸ்ட்டியான ரவா லட்டு பிடிக்கலாம்.
* கொத்துமல்லித் துவையல் அரைக்கும்போது புளிக்கு மாற்றாக மாங்காயைச் சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் அசத்தும்.
* சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும்போது ஒரு தேக்கரண்டி கொள்ளு சேர்த்து வேக வைத்தால் உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.
* காலிஃப்ளவரை சமைக்கும்போது தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பால் பவுடரைச் சேர்த்தால் காலிஃப்ளவர் வெண்மையாக இருக்கும்.
* இட்லிக்கு அரைக்கும் மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து இட்லி ஊற்றி வைத்தால், இட்லி பூப்போல வரும்.
* கடைசியில் இருக்கும் இட்லி மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து ஆப்பச்சட்டியில் ஆப்பங்களாக ஊற்றினால், வித்தியாச சுவையில் மாலை நேர டிபன் தயார்.
– எம். நிர்மலா.