* குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறுஅல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்துவிடும்.
* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
* தோசைமாவு அதிகம் புளித்துவிட்டால் அதனுடன் ஒரு கரண்டி பால் சேர்த்து சுட்டால், புளிப்புச் சுவை குறைந்து மாவு நன்றாக இருக்கும். ஒருவேளை தோசைமாவு ஏற்கெனவே நீர்த்திருந்தால் பாலுடன் இரண்டு தேக்கரண்டி ரவை மற்றும் அரிசிமாவு சேர்த்து அதனுடன் கலந்துவிட்டால் மேலும் நீர்த்துப் போகாது. புளிப்பும் தெரியாது.
* வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால் மிகுந்த மணத்துடன் இருக்கும்.
* மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று புகாமல் மூடி வைத்தால் மாவு கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.
* பூரி செய்வதற்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்தால், பூரி நீண்டநேரம் அப்படியே உப்பலாக இருக்கும்.
* பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே விழாது.
* தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.
* அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வரமிளகாய் அல்லது பிரியாணி இலை இதில் ஏதாவது ஒன்றை அரிசியில் போட்டுவைத்தால் பூச்சி வராது.
* பாதாமின் தோலை ஈசியாக உரிக்க, பாதாமில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் ஊற வைத்தால் தோல் எளிதாக உரிந்துவரும்.
* வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைத்தால் கெட்டுப்போகாமல் இருக்கும்.- கவிதா பாலாஜிகணேஷ்
* தேயிலைத்தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே அதில் இரண்டு ஏலக்காயையும் பொடித்துப்போட்டு கலந்து விட்டால் ஏலக்காய் தேநீர் கமகமக்கும்.
* ஜாடியில் ஊறுகாயைப் போடுவதற்கு முன்பு கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை நன்கு துடைக்கவும். அதன்பிறகு, ஊறுகாயைப்போட்டு மூடி வைத்தால் பூசணம் பிடிக்காமல் இருக்கும்.
* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன் படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* சாம்பார் வைக்க துவரம் பருப்பு இல்லையென்றால். ஒரு கப் கடலை மாவை கரைத்துவிட்டு, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
* அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போது, அத்துடன் வரமிளகாயையும் சேர்த்து உடைத்துவிட்டால், மிளகாய் வீணாகாது. ருசியும் கூடும்.
* மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். அதில் இருக்கும் காய்களை மோரில் ஊறவைத்து, காயவைத்தால் மணத்தக்காளி வற்றல் கிடைக்கும். இதை வறுத்தும் சாப்பிடலாம். குழம்புக்கும் போடலாம்.– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகம் கொதிக்கக்கூடாது
* தோசை பொன்னிறமாகிவர அரிசியுடன் ஒரு பிடி கடலைப்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
* தோசைமாவு அரைக்கும்போது கொஞ்சம் பிரெட்டையும் போட்டு அரைத்தால் தோசை முறுகலாக வரும்.
* ரசத்தில் புளி கரைக்கும்பொழுது அத்துடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கரைத்தால் சுவையாக இருக்கும்.
* சேமியா, நூடுல்ஸ் இவற்றை வேக வைக்கும்போது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டுவிடும். இதைத் தவிர்க்க வேக வைக்கும்பொழுது தண்ணீரில் ஒரு தேக் கரண்டி எண்ணெய்விட்டு வேகவிடவும்.– சுந்தரிகாந்தி, பூந்தமல்லி.