* தண்ணீரில் உப்பு கலந்து ஒரு கொதி வந்தபிறகு கீரையையோ, காய்கறிகளையோ வேகவைத்தால் நிறம் மங்காமல் அதே நிறத்திலேயே இருக்கும்.
* தண்ணீரில் புளியை நன்கு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் சமையல் நேரத்தை மிச்சப் படுத்தலாம்.
* சில சமயம் வெல்லத்தை துருவ வேண்டும் என்றால் காய்கறித் துருவலில் வைத்து துருவிட சிரமம் இல்லாமல் சீக்கிரமே வெல்லத்தூள் நமக்குக் கிடைக்கும்.
* நெய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க, நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லக் கட்டியை போட்டு வைத்தால் போதும்.
* வெங்காயம் நறுக்கும்போது கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
* சமைத்த உணவுப் பொருளில் உப்பு அதிகமாகிவிட்டால், இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறை பிழிந்துவிட்டால் உப்பு சரியாகிவிடும்.
* குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டதா, ஒரு துண்டு வெல்லத்தை குழம்பில் சேர்த்தால் உப்புச் சுவை தெரியாது.
* காய்கறிகளை நறுக்குவதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.– ஜி.மஞ்சரி
* தேன்குழல், முறுக்கு, சீடைக்கான மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்தால் நன்கு மொறு மொறுவென்று இருக்கும்.
* சாம்பாரில் தக்காளியை நறுக்கி போடுவதை விட மிக்சியில் அரைத்துப் போட்டால் ருசி தனியாக தெரியும்.
* மண்பாண்டத்தில் பாலை ஊற்றி தயிருக்கு உறை சேர்த்தால் தயிர் கெட்டியாக இருக்கும்.
* ஃப்ளாஸ்க்கில் கெட்ட வாடை வீசினால் ஒரு தேக்கரண்டி கடுகை அரைத்து தண்ணீரில் கலந்து ஒருநாள் முழுக்க ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்தால், வாடை நீங்கிவிடும்.– ஜி. இனியா
* ரவை மற்றும் மைதா டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* வெயில் காலங்களில் தயிர் மிக விரைவில் புளித்துப் போகும். அப்படி புளிக்காமல் இருக்க தயிர் உறைந்த உடனேயே அதில் சிறிதளவு இஞ்சித்தோலை நீக்கி நறுக்கி போட்டு வைத்தால் எளிதில் புளிப்பு ஏற்படாது.
* தக்காளிச் சட்னி அரைக்கும்போது சிறிதளவு புதினாவை போட்டு அரைப்பதன் மூலம் சட்னி வித்தியாசமாகவும், நறுமணத்தோடும் இருக்கும்.
*உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் பருப்பு டப்பாவில் சிறிது வேப்பிலை மற்றும் வரமிளகாய் போட்டு வைக்கலாம்.
* மிளகு, சீரகம் இரண்டையும் பொடித்து இட்லி மாவில் கலந்து இட்லி சுட்டால் புதுசுவையுடன் ஆரோக்கியமாக இருக்கும்.
* சப்பாத்தி மாவுடன் சோயாமாவு, இளநீர் இரண்டையும் கலந்து பிசைந்து சப்பாத்தி சுட்டால் சுவையாக இருக்கும்.
* சட்னிக்கு கடுகு – உளுந்து தாளிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பையும் சேர்த்து தாளித்து போட்டால் சட்னி சுவையாக இருக்கும்.
*கிரேவிகள் செய்யும்போது, கைப்பிடி வேர்க்கடலையை தோல் நீக்கி அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நன்றாக அரைத்து சேர்க்கலாம். கிரேவி நல்ல சுவையாக இருக்கும்.
* வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது ஒட்டாமல் இருக்க சிறிது கார்ன்ப்ளார் மாவை மேலே தூவினால் வெண்டைக்காய்ப் பொரியல் தனித்தனியாக இருக்கும்.
* மோர் மிளகாய் தயார் செய்யும்போது, அதனுடன் பாகற்காயையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகற்காய் வற்றல் அவ்வளவு கசப்பு தெரியாது.
* வெங்காய அடை செய்யும்போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கும்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீரூற வைக்கும்.
* வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப் பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு தெளிக்கவும்.
* அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாகத் தட்டி, இட்லித் தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடைபோல சூப்பராக இருக்கும்.
பா.பரத்