நன்றி குங்குமம் தோழி
* லட்டு செய்யும் போது அந்த கலவையில் ஏதாவது பழ எசன்ஸை கலந்து லட்டு செய்தால் சுவையும், மணமும் அனைவரையும் கவரும்.
* சோமாஸ் செய்யும் போது உள்ளே வைக்கும் பூரணம் உதிர்ந்து விடாமல் இருக்க பூரணத்தில் சிறிதளவு நெய்விட்டு கலந்து விட்டால் உதிராது.
* இனிப்பு வகைகளுக்கு கலர் சேர்த்து செய்யும்போது, அந்த கலரை ஒரு ஸ்பூன் வென்னீரில் கரைத்து கலந்தால் கலர் எல்லா இடங்களிலும் நன்றாக கலந்து கொள்ளும்.
– எஸ்.சுஜிதா, மதுரை.
பச்சடிகள்
* கெட்டியாக உள்ள தயிரில் தோல் சீவி துருவிய கேரட், உப்பு சேர்த்து கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் வதக்கினால் தயார்.
* தக்காளியை ஒன்று வதக்கி அத்துடன் ஒரு பச்சை மிளகாய் வைத்து அரைத்து தயிரில் கடுகு தாளித்து உப்பு போட்டு கலந்தால் தயார்.
* தோல் சீவிய விரல் அளவு இஞ்சியை உப்பு சேர்த்து அரைத்து உப்பு, துளி சர்க்கரை சேர்த்து கடுகு தாளித்தால் தயார்.
* நெல்லிக்காயை 2 வேகவைத்து கொட்டை நீக்கி 1 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் தயார்.
* கெட்டித் தயிரில் வறுத்த உளுத்தம் மாவு, கல் உப்பு, சீரகம் இரண்டையும் நசுக்கி அதில் சேர்க்கவும்.
* ஊறவைத்த 5 பாதாம் பருப்பு, 2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தயிரில் உப்பு சேர்த்து கலக்கவும்.
* புதினாவை 1/2 கை அளவுக்கு எடுத்து 1 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து உப்பு, 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தயிரில் கலந்தால் தயார்.
* தோல் சீவிய வெள்ளரிக்காயை துருவி தயிரில் உப்பு சேர்த்து கலந்து கடுகு தாளிக்க தயார்.
– என்.உமாமகேஸ்வரி, சென்னை.
* காலையில் வைத்த சாம்பாரை மீண்டும் மாலையில் இட்லி, தோசை போன்ற டிபனுக்குத் தொட்டுக் கொள்ள பயன்படுத்தும் பொழுது சிறிது வெந்தயத்தையும் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையையும் வறுத்துப் பொடி செய்து போட்டால் ஹோட்டல் சாம்பார் போல நல்ல வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.
* பால் முறிந்து விட்டால், முறிந்த பால் ஆறிய பின் மிக்ஸியிலிட்டு ஓட்டுங்கள். பிறகு உறை வையுங்கள். பால் நன்கு உறைந்து கெட்டியான தயிராகிடும்.
* சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போல் தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணையைச் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.
– கீதா ஹரிஹரன், கேரளா.
* கீரையுடன் பயத்தம் பருப்புக் கூட்டு செய்யும் போது ஒரு கப் பாலை அதில் விட்டால் மணமாக இருக்கும்.
* பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்து விட்டால் பழுத்து விடாமல் பசுமையாகவே இருக்கும்.
* வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும் மிளகுப் பொடியும் கலந்தால், அது சுவையுடன் இருக்கும்.
– எல். உமா மகேஸ்வரி, வாணியம்பாடி.
* பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்காமல் இருந்தால் நீண்ட நாட்கள் பாதுகாப்பாகவும், வாடை இல்லாமலும் இருக்கும்.
* அசைவம் சமைத்த பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை போக்க, புளியை சிறிதளவு தடவிப் பிறகு வழக்கம் போல கிளீனிங் பவுடர் போட்டு தேய்த்தால் நீங்கிடும்.
* இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாக, மணமுடன் இருக்கும்.
– அனிதா நரசிம்மராஜ், மதுரை.
* பருப்புடன் சிறிது நல்லெண்ணையும் சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து வேகவிட்டால் பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.
* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
* வெண்டைக்காய்களின் காம்புகளையும், தலை பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
* ஊறிய பாசிப்பருப்பு, வெள்ளரித் துண்டு, சீவிய கேரட், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையாக இருக்கும்.
* 8 டீஸ்பூன் கோதுமை மாவு, 2 ஸ்பூன் மைதா மாவு, சீரகப்பொடி, தேவையான உப்பு, பெருங்காயப் பொடி இவை சேர்த்தால் சுவையான முறுகலான தோசை ரெடி.
* சேனை, கருணை மசியல் செய்யும் போது கடலைப்பருப்பு கொஞ்சமாக போட்டு, அதற்கு பதிலாக மீல்மேக்கர் சேர்த்தால் சுவை அதிகம். சத்தானதும் கூட.
– பானுமதி வாசுதேவன், மேட்டூர்.
முளைப்பயறு உப்புமா
தேவையானவை:
சம்பா கோதுமை ரவை – 1கப்,
பச்சைப் பயறு – ½ கப்,
வெங்காயம் – ½ கப்,
பொடியாக நறுக்கிய கேரட் – ¼ கப்,
பச்சை மிளகாய் – 3, கடுகு – சிறிதளவு,
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு –
தேவையான அளவு.
செய்முறை: பச்சைபயறை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், காய்கறிக் கலவை, முளைவிட்ட பச்சைப்பயறு, உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கோதுமை ரவை வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு ரவையை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான, சத்தான பயறு உப்புமா ரெடி. இந்த சத்தான ஆரோக்கியமான ரவையை குழந்தைகளுக்கு ெகாடுக்க உடல் வலிமை பெறும்.
– ச.லெட்சுமி, தென்காசி.