* காரக்குழம்பு தயாரிக்கும்போது அதிகம் தண்ணீர் சேர்த்துவிட்டால், ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை வறுத்தரைத்துச் சேர்த்தால் குழம்பு கெட்டியாகிவிடும். டேஸ்ட்டாகவும் இருக்கும்.
* வடை, சிப்ஸ், பஜ்ஜி போன்றவற்றைப் பொரித்தெடுக்கும்போது, நான்கு துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் எண்ணெய் குடிக்காது. டேஸ்ட்டாகவும் இருக்கும்.
* அடைக்கு ஊற வைக்கும்போது ஒருபிடி கோதுமையையும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் அடை மொறு மொறுப்புடன் டேஸ்ட்டாக இருக்கும்.
* புளித்த தோசை மாவில் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து பணியாரம் செய்தால் ருசியாக இருக்கும்.
* பிரெட்டைத் துண்டுகளாக்கி, காயவிடவும். அதை புலாவ், பிரியாணி ஆகியவற்றில் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
* தயிரின் மேல் படிந்துள்ள ஆடையை சேகரித்து ஃபிரிட்ஜில் வைத்து வாரம் ஒருமுறை அதை மிக்ஸியில் போட்டு வெண்ணெய் எடுத்தால் அதிக அளவில் கிடைக்கும்.
* புதினா, கொத்துமல்லி சட்னியை தண்ணீரில் கலந்து அதில் அரிசியைச் சேர்த்து வேகவிட்டால் சுவையான புதினா சாதம் ரெடி.
* காய்ந்து கெட்டியான சீஸை உதிர்த்து, முட்டையுடன் கலந்து ஆம்லெட் செய்தால் சூப்பராகவும் இருக்கும். மணமுடனும் இருக்கும்.
* வடுமாங்காய் ஊறிய காரமான நீரில் சிறிது மோர் கலந்து குடித்தால் ருசியாக இருக்கும்.– எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
* பயத்தம்பருப்பை சிவக்க வறுத்து பொடி செய்து, வெல்லப்பாகில் கலந்து முந்திரி, ஏலக்காய் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்தால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்து உருண்டை தயார்.
* பால் காய்ச்சும்போது பாத்திரத்தில் முதலில் ஒரு கரண்டி தண்ணீரை விட்ட பிறகு பாலை ஊற்றிக் காய்ச்சினால் பால் பாத்திரத்தில் ஒட்டாது. அடி பிடிக்காது.
* கீரையை வேகவிடும்போது பாத்திரத்தை மூடாமல் திறந்தே வைத்திருந்தால் அதன் பசுமைநிறம் மாறாது.
* புது அரிசி குழைகிறதா? அரிசியைக் கொதிக்கும் வெந்நீரில் களைந்து ஈரம் போக வடிகட்டி பிறகு பானையில் போட வேண்டும். சாதம் வடிக்கும்போது சிறிது நல்லெண்ணெய்விட்டு வடித்தால் சாதம் குழையாது.
* சாதம் சமைக்க பயன்படுத்தும் பாத்திரத்தில் உட்பக்கத்தின் அடியில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவிவிட்டால் சமைக்கும்போது சாதம் அடிப்பிடிக்காது.
* பிஸ்கட், முறுக்கு, சீடை போன்றவற்றை வைத்துள்ள டப்பாவின் உள்பக்கம் உப்புப் பொட்டலம் ஒன்றைப் போட்டு வைத்துவிட்டால் நமத்துப் போகாமல் புதிதாக பல நாட்கள் இருக்கும்.
* பொரித்த கூட்டு செய்யும்போது தேங்காய் சிறிதளவு, அரிசி ஒரு தேக்கரண்டி, கசகசா ஒரு தேக்கரண்டி, மிளகாய்வற்றல் சேர்த்து அரைத்து கொதிக்கவிட்டால் கூட்டுமணமாக இருக்கும்.
* சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தால், சென்னாமசாலா போன்றவை செய்யும்போது அதில் கடைசியாக ஒரு தேக்கரண்டி கார்ன்ஃப்ளார் கரைத்து விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வெண்ணெய் காய்ச்சும்போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொண்டால் நெய் காய்ச்சும் பாத்திரத்தில் அடி பிடிக்காமல் இருக்கும்.
* உருளைக்கிழங்கு காரக்கறி செய்ததும் வெங்காயத்தை மெல்லிய நீளத்துண்டுகளாக்கி ஒரு தேக்கரண்டி வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து மேலே தூவினால் காரக்கறி பிரமாதமாக இருக்கும்.
* சேனைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து நன்கு மசிக்கவும். அதே அளவு மைதாமாவுடன் கிழங்கையும் தேவையான உப்பு, சீரகப்பொடி சிறிதளவு காரப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி செய்ய சூப்பராக இருக்கும்.
* பஜ்ஜிக்கு மாவு கரைக்கும்போது கடலைமாவு, அரிசிமாவுடன் ஒரு கை கோதுமை மாவும் சேர்த்து சற்று கெட்டியாகக் கரைத்துக்கொண்டால், பஜ்ஜி உப்பலாகவும் இருக்கும். அதிக எண்ணெயும் குடிக்காது.
-ஜி.இனியா, கிருஷ்ணகிரி.