* பருப்பு உசிலி செய்ய பருப்பை முதலில் ஊறவைத்து வடிகட்டி, அப்படியே இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து விடவும். ஆறியதும் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு
சுற்று சுற்றினால் பூப்போல உசிலிக்கு தேவையான பருப்பு ரெடி.
* லட்டுக்கு பாகு எடுக்கும் போது கம்பிப் பதத்தில் இருக்க வேண்டும். முத்து முழுவதுமாக வெந்துவிட்டால் அது காராபூந்தியாகி விடும். முக்கால் பதம்தான் வெந்திருக்க வேண்டும். சூட்டோடு உருண்டை பிடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் உருண்டை உதிர்ந்து விடும்.– எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
* கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* வெண்ணெயில் உப்பை தூவி விட்டால் நாள்பட்டாலும் கெடாது.
* மிளகாய் பொடியுடன் தயிரை குழைத்து இட்லி அல்லது தோசைக்கு தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
* காலிஃப்ளவர், முட்டைக்கோசு கூட்டு செய்யும் போது அரை ஸ்பூன் இஞ்சிச் சாறு ஊற்றி செய்வது நல்லது. ருசியும் சூப்பராக இருக்கும்.- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.
* வாழைக்காயை அரை வேக்காடாக வேகவைத்த பிறகு மெல்லிய வில்லைகளாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுப்பாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.
* முளைக்கீரையை உப்பு போட்டு வேகவைத்து தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து இரண்டு தேக்கரண்டி புளிக்காத தயிர் விட்டு தாளித்தால் கீரைப் பச்சடி அமிர்தம் போல இருக்கும்.- புனிதவதி, கோவை.
* 3 பங்கு கோதுமை மாவிற்கு 1 பங்கு மைதா மாவு, 2 பங்கு வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து மாவை கரைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு வெல்ல தோசை செய்ய தோசை நன்றாக கல்லிலிருந்து எடுக்க வரும். முதலில் வாசனை வராத எண்ணெய் ஊற்றி செய்து பிறகு கல்லிலிருந்து எடுத்த பிறகு நெய் தடவினால் சுவையாக, மணமாக இருக்கும். கல்லிலேயே நெய் சேர்த்தால் தோசை எடுக்க வராமல் ஒட்டிக்கொண்டு விடும்.
*துவையல் அரைக்கும் போது புடலங்காய், சௌ செள, கேரட் இம்மூன்றையும் வதக்கி மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இவற்றையும் தேங்காய் எண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து அரைக்க சுவையான, வித்தியாசமான துவையல் தயார். கடுகு சேர்த்து கடைசியாக தாளிக்க வேண்டும்.
* சாம்பார் செய்யும் போது புளிக்கு பதில் எலுமிச்சை சாறை குழம்பு இறக்கி வைத்த பிறகு சேர்க்க கமகம சாம்பார் தயார்.- ராஜி குருஸ்வாமி, சென்னை.
* கீரை, பயத்தம் பருப்பு கூட்டு செய்யும் போது ஒரு கப் பால் அதில் விட்டால் மணமாக இருக்கும்.
* முட்டைக்கோஸை இஞ்சியுடன் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தயிருடன் அரைத்தால் பச்சடி நன்றாக இருக்கும்.- ஹெச்.ராஜேஸ்வரி, பூந்தமல்லி.
* அரிசியை சமையலுக்கு உபயோகிக்கும் போது சிறிதளவு கல் உப்பையும் சேர்த்துக் கலந்து கழுவினால் அரிசியில் உள்ள அழுக்கு நீங்கி விடும். வெறும் தண்ணீரில் கழுவினால் குறைந்தபட்சம் மூன்று முறையாவது கழுவ வேண்டும். ஆனால் உப்பு சேர்த்தால் ஒரு முறைக் கழுவினாலே போதுமானது.
* கீரையை சமைக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து (வேகும் போது) சமைத்தால் கீரை பச்சைநிறம் மாறாமல் இருக்கும். ருசியும் அதிகரிக்கும்.
* சேமியா, அவல், ரவா உப்புமா செய்யும் போது தண்ணீரின் அளவைக் குறைத்து ½ கப் தயிரைக் கடைந்து மோராக்கி அதில் கலந்து வேகவைத்தால் உப்புமாவின் சுவை அதிகரிக்கும்.– எஸ்.ராஜகுமாரி, சென்னை.
* தோசைக்கல் தோசை சுடும் போது ஒட்டினால் கொஞ்சம் உப்புத் தண்ணீரில் கலந்து தெளித்து விட்டு பிறகு தோசை ஊற்றினால் தோசை ஒட்டாமல் வரும்.
* பனீர், சீஸ் இவை சமையல் செய்த பிறகு மீதமானால் அதனை ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து பனீர் (அ) சீஸ் இவற்றைப் போட்டு மூடி ஃபிரிட்ஜில் ஃபிரீசரில் வைத்தால் மேலே மஞ்சள் நிறம் படியாமலும், ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்.– எஸ்.நிரஞ்சனி, சென்னை.