* தக்காளியை சேர்த்து சமைக்கும் போது தக்காளி சீக்கிரமாக வதங்க சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்தால் போதும்.
* பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க ரவை ஒரு தேக்கரண்டி, பச்சரிசி மாவு ஒரு தேக்கரண்டி சேர்த்து, கோதுமை மாவை கெட்டியாக பிசைந்து, ஊற விடாமல் உடனே தடிமனாக தேய்த்து, பொரித்து எடுத்தால் உப்பலான, சுவையான பூரி தயார்.
* வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை லேசாக சூடு செய்து உபயோகித்தால் கண்களில் எரிச்சல் இருக்காது.
* அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க, பாத்திரங்களின் மேல் சிறிதளவு புளியை தடவி, பிறகு கிளீனிங் பவுடர் போட்டு தேய்த்தால் போதும்.
– ஆர்.யமுனா, காஞ்சிபுரம்.
*மூலிகை ரசம் செய்வதற்கு கற்பூரவல்லி இலை, துளசி இலை, புதினா இலை, கறிவேப்பிலை இவைகளை உபயோகிக்கவும்.
* அடை செய்வதற்காக ஊறப்போடும் பருப்புகளுடன் கம்பு, வரகரிசி இவைகளை சேர்த்து ஊறப்போடவும். சத்தும், சுவையும் மிகுந்த அடை தயாரிக்கலாம்.
– தாரா மணிவண்ணன், கோவை.
* வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது பஜ்ஜி உப்பலாக வர சமையல் சோடாவிற்கு பதில் சிறிதளவு இட்லி மாவு சேர்த்துக் கொண்டால் பஜ்ஜி உப்பி வரும்.
* கேரட்டை துருவி, சிறிதளவு உப்பு சேர்த்து, அரை கப் தயிருடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை, தேவையான அளவு கலந்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரை கரண்டி சேர்த்து செய்தால் வறுவலின் சுவை கூடுதலாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு பாலும், சர்க்கரையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
– அ.திவ்யா, காஞ்சிபுரம்.
* மாங்காய் கொட்டைகளை தூர எறிந்து விடாமல் உப்பு தடவி வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளி இல்லாமல் ரசம் தயார் செய்து அந்த ரசம் கொதிக்கும் போது இரண்டு மாங்கொட்டைகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விட வேண்டும்.
* வெண்பொங்கல் செய்த பின் காரா பூந்தி ஒரு கைப்பிடி அளவு, இருநூறு கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கை தோலை உரித்து உதிர்த்து போட்டு நெய் விட்டு கிளறிச் சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.
* நாட்டுச் சர்க்கரையை ஒரு உலர்ந்த பாட்டிலில் கொட்டி ஒரு ரொட்டி துண்டை போட்டு வைத்தால் சர்க்கரை நன்றாக உதிர்ந்து உலர்ந்து விடும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* அரிசி உப்புமா கலவையில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி அதனை இட்லி தட்டில் வேகவைத்து சாப்பிட்டால் காரடையான் நோன்பு அடை போல் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊறவைத்து, அரிசியுடன் சேர்த்து அரைத்து அந்த மாவில் தோசை வார்த்தால் ஆரோக்கியமான தானிய தோசை ரெடி.
* தேங்காய் துருவலுடன் ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து தேங்காய் பர்பி செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
* தோசை மாவு அரைக்கும் போது உளுந்தோடு சிறிது கடலைப்பருப்பைச் ேசர்த்து அரைத்தால் தோசை பொன்னிறமாகவும் சுவையாகவும் இருக்கும்.
– அமுதா அசோக்ராஜா, திருச்சி.
* கீரைகள், காய்கறிகள் வேகவைக்கும்போது அல்லது சமைக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் போதும் மிக ருசியாக இருக்கும்.
* முட்டைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதன் மீது சமையல் எண்ணெயை தடவி வைத்தால் போதும்.
* வெண்டைக்காய்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்காமல் துணிப்பையில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
* பாகற்காய் பொரியல் செய்யும் போது முளைக்கீரை அல்லது அரைக்கீரையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொண்டால் ருசியாகவும், மணமாகவும், கசப்பில்லாமலும் இருக்கும்.
– எஸ்.ஜெயந்திபாய், மதுரை.