நன்றி குங்குமம் தோழி
*கம்பு மாவுடன் கொண்டைக்கடலை மாவு சம அளவு சேர்த்து, உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், கறிவேப்பிலை, வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து,
காய்ந்த எண்ணெயில் சேர்த்து ‘பக்கோடா’க்களாக பொரித்து பரிமாறலாம்.
* கம்பு மாவுடன் உப்பு, பொடித்த ஓமம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து, இட்லி தட்டில் வேகவிடவும். பிறகு எடுத்து உதிர்த்தால் ஓம கம்பு புட்டு தயார்.
* தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து சூடானவுடன் மாவுக் கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும். இடையிடையே சிறிது நெய் சேர்க்கவும். மாவு நன்கு வெந்ததும் சுக்குத்தூள், முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். புரதச் சத்து மற்றும் நார்ச் சத்து நிறைந்தது.
* சாமை அரிசி மாவுடன் உப்பு, வெந்நீர் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி ஆறவிட்டு, இடியாப்பக்குழலில் இட்டு இடியாப்பமாக பிழிந்து வேக விடவும். நார்ச்சத்து நிறைந்த சத்தான சிற்றுண்டி தயார்.- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது, வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்து செய்தால் பக்கோடா மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
* ரவா தோசை செய்யும் போது 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருக்கும்.
* தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால், பர்பி அருமையாக இருப்பதோடு வில்லைப் போடும் போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
* துவரம் பருப்பிற்கு பதிலாக, பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்பு பொடி செய்தால், பருப்பு பொடி மிகவும் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
* எண்ணெய் பலகாரம் வைக்கும் டப்பாவில் சிறிது உப்பை துணியில் கட்டி போட்டு வைத்தால் காரல் வாடை வராது.
* வெங்காய தயிர் பச்சடி செய்யுமுன் வெங்காயத்தில் உப்பு தூள் சேர்த்து பிசிறிவிட உப்பு திட்டமாக கலந்து விடும்.
* பட்டாணி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு ஊறவைக்க மறந்து விட்டால், ஹாட் பாக்சில் கொதிக்கும் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்தால் முதல் நாளே ஊறவைத்தது போல் இருக்கும்.
* தேங்காய் துவையலில் ஒரு ஸ்பூன் தனியா வறுத்து சேர்த்தால் கூடுதல் மணத்துடன் ருசியாக இருக்கும்.- எஸ்.வெண்மதி, சென்னை.
* ரெடிமேட் பஜ்ஜி மாவில் ஒரு சிட்டிகை சமையல் ேசாடா கலந்து, பஜ்ஜி மாவில் கரைத்து, சிறிய உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் மொறுமொறு மெதுபக்கோடாதயார்.
* தக்காளி சட்னிக்கு நாட்டுத் தக்காளி ஏற்றது. மற்ற தக்காளியாக அமைந்தால் சிறிது புளிக்கரைசலுடன் மிளகாய் பொடி சேர்த்து அரைத்தால் சட்னி புளிப்பும் காரமும் கலந்திருக்கும்.- என்.பர்வதவர்த்தினி, சென்னை.
* முள்ளங்கி, காலிஃபிளவர் வாங்கும்போது நிறைய இலைகள் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும்.
* மிருதுவான காய்கறிகளை வேகவைக்க குறைந்த அளவு தண்ணீர் உபயோகித்தால், விரைவாகவும், சத்துக்கள் வீணாகாமல் இருப்பதோடு எரிபொருளும் குறைந்த அளவு செலவழியும்.
* எந்த சாம்பார் வைத்தாலும் சில செளசௌத் துண்டுகளை வதக்கிப் போட்டால் சாம்பார் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.- அனிதா நரசிம்மராஜ், மதுரை.
* மிக்ஸி ஜாருக்குள் ஐஸ் கட்டிகளை சிறிதளவு போட்டு நன்றாக அரைத்தால் மிக்ஸி பிளேடு நன்றாக கூர்மையாகி விடும்.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது இரண்டு ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து சேர்த்தால் பாயசம் கெட்டியாகவும், மணமாகவும் இருக்கும்.
* வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது, சிறிதளவு இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும். உடலுக்கும் கெடுதல் இல்லை.
* சாப்பாட்டில் செய்யும் பதார்த்தங்களில் மிளகாய்க்கு பதில் மிளகை சேர்த்து செய்தால் உடலில் கணிசமாக கொழுப்பு சேர்வதை குறைக்கும்.- கே.சித்ரா, சென்னை.