நன்றி குங்குமம் தோழி
*மோர்க்களி செய்து பின்னர் கடைசியாக அதன் மீது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி எடுத்தால் அபார சுவை கிடைக்கும்.
*அரிசி உப்புமாவில் பச்சை மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக காய்ந்த மிளகாய் தாளித்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
*உளுத்தம் பருப்பு, சிறிது புளி, வரமிளகாயுடன் செளசௌ, அல்லது பீர்க்கங்காய் தோலை வீணாக்காமல் கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் போட்டு துவையல் அரைக்கலாம். சுவையாக இருக்கும்.
*அரிசி உப்புமாவில் காரச்சுவை அதிகம் உள்ளது போல் உணர்ந்தால் அது உப்பு குறைவால் கூட இருக்கும். அப்போது சிறிது சிட்டிகை உப்பை அதன் மீது தூவி கிளறி எடுத்தால் காரம் சமனமாகிவிடும்.- என்.பர்வதவர்த்தினி, சென்னை.
*அவியல் செய்யும் போது அரைத்த தேங்காய் விழுதை தயிரில் கலக்காமல், வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து பிறகு தயிர் கலந்தால் அவியல் நீர்த்துப் போகாமலிருக்கும்.
*ரவா லாடு, மாலாடு செய்யும் போது அரைத்த சர்க்கரையையும், நெய்யையும் ஒரு தட்டில் நன்றாக குழைத்து கலந்தபின் மாவை அதில் கலந்து உருண்டை பிடித்தால் சுவை கூடுதலாகும்.
*மிக்சருக்கு அவல் பொரிக்கும் போது சிதறாமல் தவிர்க்க வடிகட்டியில் அவலைப் போட்டு கொதிக்கும் எண்ணெயில் முக்கி பொரிக்கலாம்.- மல்லிகா அன்பழகன், சென்னை.
*சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொண்டு, தேங்காய், வரமிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் அரைத்து, வெங்காயத்தையும் அரைத்து விழுதையும் நன்றாக வதக்கிய பின் 1 பங்கு அரிசி, 2 பங்கு நீர்விட்டு வேகவிட்டு, உப்பு சேர்த்து கலக்கினால், ஆனியன் ரைஸ் ரெடி.
*மணத்தக்காளி கீரையை வதக்கி, பருப்போடு மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்தால் சுவையான சட்னி ரெடி.
*ரவா தோசை செய்யும் போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
*மோர்க்குழம்பு சுவை தூக்கலாக இருக்க கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் மாங்காய் வற்றலை தயாரித்து சேர்க்க குழம்பு சுைவயோ சுவை.
*இட்லியில் உளுந்துக்கு பதில் சோயா மொச்சையை பயன்படுத்தி இட்லி தயாரித்தால் உடலுக்கு அதிகமாக சத்து கிடைக்கிறது.
*மாங்காய் அதிக புளிப்பாக இருந்தால் நறுக்கி, துண்டுகளாக்கி, சுண்ணாம்பு தண்ணீரை விட்டுக் கழுவ புளிப்பு குறைந்து விடும்.
*கீரைக் கூட்டு, பருப்புக் கூட்டு செய்யும் போது சிறிது வறுத்த சீரகத்தைப் போட்டு கரைத்து செய்தால் வாசனையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர்.- கே.எல்.சுபாக்கனி, கன்னியாகுமரி.
*சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் செய்வதற்கு குருணை அரிசியை உபயோகிக்க பொங்கல் நன்கு குழைந்திருக்கும். சர்க்கரை பொங்கலுக்கு வெல்லம் பாதி, அஸ்கா பாதி ேசர்த்து செய்தால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
*பச்சை மஞ்சள் நிறைய இருந்தால் அதை சுத்தம் செய்து, காயவைத்து ஊறுகாய் போடலாம்.
*மோர் மிளகாய் போடுவதற்கு வெந்தயத்தையும், உப்பையும் அரைத்து மோரில் கலந்து, பச்சைமிளகாயை குறுக்காக நறுக்கிப் போட்டு ஊறவைக்கவும்.
*வெண்பொங்கல் மீந்து போய் விட்டால் அதனுடன் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் உருட்டிப்போட்டு மாலை நேர ஸ்நாக்ஸ் செய்யலாம்.- அனுஜெய், ேகாவை.
*மீதமான சாதத்தை மிக்ஸியில் மாவு பதத்தில் அரைத்து அதில் சிறிது கடலை மாவை சேர்த்து தோசை ஊற்றினால் சுவையான தோசை.
*கோதுமை மாவை வாணலியில் வறுத்து ஆறியதும் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்தால் ருசியான கோதுமை இடியாப்பம் ரெடி.- ஹேமலதா, தஞ்சை.