செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதை சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார். பழைய கட்டிடத்துக்கு கட்டவேண்டிய மின்கட்டணத்தை கடந்த 2 ஆண்டுகளாக செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால்புதிய கட்டிடம் திறக்கும்போது, பக்கத்து வீட்டிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அதையும் நாளடைவில் துண்டித்துவிட்டதால், தற்போது அந்த புதிய அங்கன்வாடி மையத்தில் மின் வசதி இல்லை. இதனால் 36 குழந்தைகள் படித்து வந்த இந்த மையத்தில் தற்போது 2 குழந்தைகள் மட்டுமே வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட நிர்வாகம் என பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, மின்கட்டண பாக்கியை செலுத்தி மீண்டும் மின் இணைப்பு பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.