கீழ்வேளூர்,ஆக. 28: கீழ்வேளூர் போலீஸ் சரகம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கீழத்தெருவில் உள்ள செங்கல் சூளை பகுதியில் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அந்த பகுதியில் சாராய விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சாராய விற்பனை நடைபெறும் செங்கல் சூளை பகுதியில் ஒன்று திரண்டனர்.
இதை கண்ட சாராய விற்ற நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களில் வைத்திருந்த சாராயத்தை கைப்பற்றினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசாரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைப்பற்றப்பட்ட சாராயத்தை பொதுமக்கள் கீழே கொட்டி அளித்தனர். மேலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.