கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே அதிகாலை ஆவின் டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் பால் வீணானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், சு.பாம்பாம்பாடி, ராதாபுரம், மலையனூர் செக்கடி ஆகிய பகுதிகளில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்து குளிரூட்டப்படுகிறது. பின்னர் சென்னை மாதவரத்தில் உள்ள பால் பண்ணைக்கு டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.
அதன்படி கீழ்பென்னாத்தூரில் உள்ள பால் குளிரூட்டும் மையத்தில் இருந்து இன்று அதிகாலை 15,490 லிட்டர் பால் நிரப்பி கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்னை மாதவரம் பால்பண்ணைக்கு புறப்பட்டது. சென்னையை சேர்ந்த பிரபு (46) என்பவர் லாரியை ஓட்டி சென்றார். அதிகாலை 2.30மணியளவில் கீழ்பென்னாத்தூர் பைபாஸ் சாலையில் ராஜாதோப்பு பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார். டேங்கரில் இருந்து பால் வீணாக வெளியேறியது.
இதுகுறித்து டிரைவர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் உதவியுடன் டேங்கர் லாரியை மீட்டனர். இதனால் டேங்கரில் இருந்து பால் முழுவதும் வீணாவது தடுக்கப்பட்டது. இருப்பினும் சுமார் 5ஆயிரம் லிட்டர் பால் வீணானது. விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.