Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்து பீர் பாட்டிலால் மாணவன் மண்டை உடைப்பு: போலீசார் விசாரிக்க தடை விதித்த ஆர்எம்ஓ

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் 3ம் ஆண்டு மாணவனை, சீனியர் மாணவர்கள் மது போதையில் அழைத்து ராகிங் செய்து, பீர் பாட்டிலால் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை, மருத்துவமனை ஆர்எம்ஓ தடுத்து நிறுத்தியதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த ஜேக்கப் மகன் ஹாலன்(21), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு, விடுதியில் உள்ள தனது அறைக்கு ஹாலன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, விடுதியில் மது போதையில் இருந்த 5ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் கிஷன் (24), தியானேஷ் (24) ஆகியோர், ‘‘சீனியர்கள் நாங்கள் இருக்கும் போது, எங்களுக்கு சல்யூட் அடிக்காமல் எப்படி நீ எங்களை கடந்து போகலாம்’’ என வழிமறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு ஹாலன், நான் கவனிக்கவில்லை என்று கூறியுள்ளார். உடனே கிஷன் மற்றும் தியானேஷ் ஆகிய இருவரும் ஹாலனை கிண்டல் செய்தபடி, உனது அறையில் தங்கியுள்ள ஜூனியர் மாணவர்களை இங்கு, இப்பவே அழைத்து வரவேண்டும், என்று ராகிங் செய்துள்ளனர். உடனே ஹாலன் வேறு வழியின்றி அறையில் உள்ள சக மாணவர்களை அழைத்து வருவதாக கூறி சென்றுள்ளார். அதற்கு கிஷன் என்பவர், ‘‘டேய் சீனியர்கள் உத்தரவிட்டால், ஓடிப்போய் அதை செய்ய வேண்டாமா, இப்படி தான் சாவகாசமாக நடந்து போவியா,’’ என ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு ஹாலன், ‘‘நீங்கள் இப்படி பேசினால், நான் மெதுவாகத்தான் போவேன்,’’ என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்களான கிஷன் மற்றும் தியானேஷ் ஆகியோர், ‘‘சீனியரையே எதிர்த்து பேசுவாயா..’’ எனக்கேட்டு, ஹாலனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதனால் வலிதாங்க முடியாமல் ஹாலன், ஒரு கட்டத்தில் சீனியர் மாணவர்களை திருப்பி தாக்கியுள்ளார். அப்போது, ‘‘எங்களையே அடிப்பியா,’’ என கூறி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஹாலன் தலையில் ஓங்கி அடித்து உடைத்தனர். இதில் ஹாலன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு ஓடிவந்த சக மாணவர்கள் ஹாலனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், டாக்டர்கள் அளித்த தகவலின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீசார் மருத்துவ மாணவர் விடுதிக்கு சென்ற போது, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஆர்எம்ஓ, போலீசாரை வழிமறித்து ‘இது எங்கள் மாணவர்கள் பிரச்னை. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பினார். அதற்கு போலீசார், மாணவன் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

மாணவனுக்கு ஏதேனும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் யார் பதில் சொல்வது என்று கேட்டுள்ளனர். அதற்கு ஆர்எம்ஓ ‘‘சார் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,’’ என்று கூறி போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் போலீசார் திரும்பி வந்துவிட்டனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தகவல் அறிந்து, உடனடியாக நெய்வேலியில் இருந்து நேற்று சென்னை வந்து, சீனியர் மாணவர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாணவனை ராகிங் செய்து மண்டையை உடைத்த சீனியர் மாணவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் துரை நேற்று காலை ராகிங் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். ராகிங் செய்து மாணவன் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.