*பொதுமக்கள் கலெக்டரிடம் புகார்
நாகர்கோவில் : கிள்ளியூர் பேரூராட்சி 17வது வார்டு கவுன்சிலர் டென்ஸ்குமார் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கிள்ளியூர் பேரூராட்சி 17 வது வார்டு நெல்லிவிளை பகுதியில் பனிக்கட்டி தொழிற்சாலை (ஐஸ் பிளாண்ட்) குடியிருப்புகள் நிறைந்த பொது நீர்நிலைகள், பொது கிணறுகள், வழிபாட்டுத்தலங்கள் பள்ளிக்கூடம் அமைந்த குறுகிய சாலை கொண்ட பகுதியில் அமைக்க முயற்சி செய்து வந்தனர்.
இந்த நிலையில் கிள்ளியூர் பேரூராட்சியில் அனுமதி குறித்து முடிவெடுக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தொழிற்சாலைக்கு எதிராக வாக்களித்ததால் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விவசாய மற்றும் குடியிருப்பு பகுதியில் இத்தகைய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கிள்ளியூர் பேரூராட்சி தீர்மானத்தை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொழிற்சாலை உரிமையாளர் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக தொழிற்சாலையை தொடர்ச்சியாக இயக்கி பனிக்கட்டிகளை உற்பத்தி செய்து வருகிறார். இது தொடர்பாக கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் தொடர்பு கொண்டு கேட்டபோது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அனுமதி பெறாத தொழிற்சாலை இயக்கத்தை தடுக்க எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் தடையாணை ஒன்று வழங்கப்பட்டது தடையாணை வழங்கப்பட்ட பின்னரும் தொழிற்சாலை தங்கு தடையின்றி இயங்கி வருகிறது.
மேலும் தடையாணை மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை எடுக்க முடியாது என அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.