வேலூர்: ஆம்பூர் பாமக பிரமுகர் கொலைக்கு காரணமான, 7 டன் செம்மரக்கட்டைகளை கடத்திய வழக்கில் தொடர்புடைய வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுவை டிஸ்மிஸ் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் கடந்த 2015 மே மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதில், வேலூர் மாவட்ட கலால் டிஎஸ்பியாக இருந்த தங்கவேலு, சின்னபையனுக்கு சொந்தமான கோழி பண்ணையில் இருந்த 7 டன் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த செம்மரக்கட்டைகளின் உரிமையாளர் தேடி வந்தபோது, போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றதை கூறியுள்ளார். அதை நம்பாத கடத்தல் கும்பல் சின்னபையனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சின்னபையனின் உறவினரான விஸ்வநாதன், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த பெருமாள், தங்கராஜ், சத்தியமூர்த்தி, வெங்கடேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கலால் டிஎஸ்பி தங்கவேலுவின் உதவியுடன் சின்னபையனின் கோழி பண்ணையில் இருந்து 7 டன் செம்மரங்களை கடத்தி சென்றதாக வேலூர் அலுமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன், அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சின்னபையனின் கோழிப்பண்ணையில் இருந்து எடுத்துச்சென்ற 7 டன் செம்மரக் கட்டைகளில் 3.5 டன் அளவுள்ள செம்மரக்கட்டைகள் நாகேந்திரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.32 லட்சம் பணம் மற்றும் 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு கூறியதால் சின்னபையனின் கோழி பண்ணையில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்று தாங்கள் பங்கிட்டுக்கொண்டதாக நாகேந்திரன் தம்பதியர் தெரிவித்தனர்.
ஏற்கனவே, தனக்கு சொந்தமான செம்மரக் கட்டைகளை சின்னபையன் வேறு நபர்களுக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றியதாகவும் நாகேந்திரன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, தங்கவேலுவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவரை வழக்கின் 3வது குற்றவாளியாக சேர்த்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான, பெங்களூரு பொம்மணஹல்லியை சேர்ந்த தமீம் என்கிற அமீத்கான்(52) என்பவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். கடந்த 2018ல் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு அமீத்கான் விமானத்தில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்த சிபிசிஐடி தனிப்படை போலீசார் அமீத்கானை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை கடத்தி வந்து வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு பாதுகாப்பில் ஆம்பூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் துணையுடன் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கைமாற்றியதாக தெரிவித்திருந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை ஆம்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தற்போது செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி தங்கவேலுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு கலால் டிஎஸ்பி தங்கவேலு கைதானதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* எஸ்.ஐ சஸ்பெண்ட்
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்(35). இவர்அப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபடும் சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் மீதான புகார்களை விசாரிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும் வடக்கு மண்டல ஐஜிக்கு சமீபத்தில் புகார் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனை சஸ்பெண்ட் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீதான புகார் தொடர்பாக துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.