கொல்கத்தா: பெண் டாக்டர் கொலை விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி கொல்கத்தாவில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்ற மாணவர் அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் முதுகலை 2ம் ஆண்டு படிக்கும் பெண் பயிற்சி டாக்டர் இரவுப் பணியின் போது பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையின் தன்னார்வலர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, கொலையாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரியும் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்லும் ‘நபன்னா சலோ’ போராட்டத்திற்கு பஸ்சிம் பங்கா சாத்ரா சமாஜ் என்கிற மாணவர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இப்போராட்டத்தில் வன்முறையை நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததின் பேரில் 6,000 போலீசார் கொல்கத்தாவின் பல பகுதிகளில் குவிக்கப்பட்டனர். நகருக்குள் நுழையும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டது. தலைமைச் செயலகம் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. ஹவுரா, ஹூக்ளி பாலம் பகுதிகளில் போலீசார் பல அடுக்கு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மாணவர் அமைப்பினர் பேரணி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் பல இடங்களி மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எம்ஜி சாலை, ஹாஸ்டிங் சாலை, சத்ரகாச்சி, ஹவுரா மைதானம் போன்ற இடங்களில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் கொல்கத்தாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இதே போல, போராட்டக்காரர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசாரும் காயமடைந்தனர்.
இன்று பந்த்: பாஜ கட்சி அழைப்பு
மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து மேற்கு வங்கத்தில் இன்று 12 மணி நேர பொது பந்த் நடத்தப்படுவதாக பாஜ மாநில தலைவர் சுகந்தா மஜும் தர் அறிவித்துள்ளார். மம்தா அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வகையில், போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்குவதாக மஜும்தர் குற்றம்சாட்டி உள்ளார்.
94 மாணவர்கள் கைது
இதற்கிடையே பேரணியின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 94 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களை உடனடியாக போலீசார் விடுவிக்க வேண்டுமெனவும் பாஜ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாஜ தூண்டிவிடுகிறதா?
மம்தா பதவி விலகக் கோரிய மாணவர் அமைப்பின் பேரணி மூலம் வன்முறையை பாஜ தூண்டிவிடுவதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இப்பேரணியை பாஜ தலைவர்கள், அக்கட்சியின் மாணவர் அமைப்பினர்தான் முன்னின்று வழிநடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜ மறுத்துள்ளது. தங்களுக்கும் பேரணியை நடத்திய மாணவர் அமைப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் பேரணிக்கு பாஜ ஆதரவு மட்டுமே அளித்ததாகவும் கூறி உள்ளது. மாணவர்கள் மீதான தடியடி சம்பவத்திற்கு பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மாநில எதிர்க்கட்சி தலைவரான பாஜவின் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈடியும் வந்தது
பெண் டாக்டர் கொலையில் சந்தேகிக்கப்படும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், அம்மருத்துவமனையில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்கிறது. இதற்கிடையே சிபிஐயின் வழக்கை அடிப்படையாக கொண்டு, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து களமிறங்கி உள்ளது. பெண் டாக்டர் கொலையில் கைதான தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு மட்டுமே தொடர்புள்ளதா அல்லது வேறு சிலரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிய டிஎன்ஏ, தடயவியல் ஆதாரங்களை டெல்லி எய்ம்ஸ் வல்லுநர்களுக்கு சிபிஐ அனுப்பி அவர்களின் பரிந்துரையை கேட்டுள்ளது.