வண்டலூர் : வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், வரும் காலத்தேவையை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகரில் அமையும் பேருந்து நிலையத்தின் அருகே ரயில் பாதை செல்வதால் ரயில் நிலையம் அமைத்தால், மக்கள் எளிதாக சென்னை நகருக்குள் செல்ல முடியும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு, கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு ஆகாய நடைமேடை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்திருந்தது. அதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் முறைப்படி ஒப்புதல் அளித்தது.
இதற்கு ரயில்வேயும் அனுமதி அளித்தது. இதன்படி, ரூ.20 கோடி செலவில் இங்கு ரயில் நிலையம் அமைய போகிறது. இந்த ரயில் நிலையம் அமைப்பதற்கான முழு செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கட்டுமான பணிக்காக ரயில்வே நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 40 லட்சம் வழங்கி உள்ளது.ஓப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் ஓராண்டில் புறநகர் ரயில் நிலைய கட்டுமான பணியை முடிக்க திட்டமிடப்பட்டது.