சேலம்: 4 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென அச்சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊர் முழுக்க தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது வெள்ளாளப்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன்(47) என்பவர் சிறுமியை தூக்கிக்கொண்டு சென்றதாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் அவர் வெள்ளாளப்பாளையம் ஆற்றங்கரையோரம் சென்றது தெரியவந்ததையடுத்து ஊர் மக்கள் காட்டுப்பகுதியில் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசாரும் அவர்களுடன் இணைந்து தேடியநிலையில் வாழை தோட்டத்திற்குள் அக்குழந்தை ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தாள்.
உடனடியாக அச்சிறுமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சோதித்து பார்த்த டாக்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட லட்சுமணன், குச்சியை எடுத்து குத்தி கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. உடனடியாக டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் மலக்குடல் கிழிந்திருந்ததும் தெரியவந்தது. 20 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிறுமி உயிர்பிழைத்தாள்.
இதற்கிடையில் கூலித்தொழிலாளி லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளியான லட்சுமணனுக்கு 2 பிரிவுகளின் கீழ் தனித்தனியாக 2 ஆயுள் தண்டனையும் (28 ஆண்டு), இன்னொரு பிரிவில் 5 ஆண்டு சிறை தண்டனையும் ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். தண்டனையை தனித்தனியாக 33 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.