தண்டையார்பேட்டை: ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற மீனவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் மாரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 17 வயது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் திடீரென சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரி மகள் மாயமானது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மாரியின் வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஷ்(37) என்பவர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நாகப்பட்டினத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்த வழக்கு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் நாகப்பட்டினம் சென்று சிறுமியை மீட்டனர். மேலும், ராஜேஷை கைது செய்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து, போலீசார் ராஜேஷ் மீது போக்சோ வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.