*கணவன், மனைவி அதிரடி கைது
நாகர்கோவில் : நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட 4 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை கடத்தியதாக பெண்ணையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா. இவரது மனைவி ஜோதிகா (20). இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன், வடசேரி பஸ் நிலையத்தில் பாசி மணிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
வியாபாரம் முடிந்து, இரவு வடசேரி பஸ் நிலையத்திலேயே தங்குவது வழக்கம். கடந்த 23ம்தேதி இரவும் முத்துராஜா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் இவர்களின் உறவினர்கள் பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில், ஜோதிகாவின் 4 மாத ஆண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வடசேரி போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஜோதிகாவின் 4 மாத குழந்தையை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த பெண் கன்னியாகுமரி செல்லும் பஸ்சில் ஏறி சென்றார். இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.நவீன்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், எஸ்.ஐ.க்கள் சரவணக்குமார், மகேஸ்வரன், மாரி செல்வம் ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
அந்த பெண் குழந்தையுடன் திருவனந்தபுரம் தான் சென்றிருக்க வேண்டும் என உறுதி செய்த போலீசார், கேரள ரயில்வே போலீசார் உதவியை நாடினர். பாறசாலை, திருவனந்தபும் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் குழந்தையை தூக்கி சென்ற பெண்ணின் போட்டோக்கள், வீடியோக்கள் வாட்ஸ் அப் மூலம் கேரள காவல்துறை மூலம் அங்குள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கேரள மாநிலம் சிறையின் கீழ் ரயில் நிலையத்தில் கைக் குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் கேரள போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால், அந்த பெண்ணையும், குழந்தையின் போட்டோவையும் குமரி மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதை பார்த்த தனிப்படை போலீசார், திருவனந்தபுரம் சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தை வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஜோதிகாவின் குழந்ைத என்பது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார், அந்த பெண்ணையும், அவருடன் இருந்த நபரையும் வடசேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த பெண் கன்னியாகுமரி வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த சாந்தி (50) என்பதும், அவருடன் நின்ற ஆண், அவரது கணவர் நாராயணன் (48) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை கடத்தியதாக சாந்தி, நாராயணனை போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட குழந்தையை நேற்று காலை வடசேரி காவல் நிலையத்தில் வைத்து, எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், அதன் தாயாரிடம் ஒப்படைத்தார். குழந்தையை வாங்கிய, அதன் தாய் ஜோதிகா எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறையினரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதார். தனது குழந்தையை மீட்க தீவிரமாக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என்று கூறினார். அவருக்கு ஆறுதல் கூறிய எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், இனி குழந்தைதயை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
சிக்கியது எப்படி?
சிறையின் கீழ் ரயில் நிலையம் அருகே ேகரள போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சாந்தி, குழந்தையுடன் சென்றார். குழந்தை அழுது கொண்டே இருந்தது. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையையும், சாந்தியையும் வீடியோ எடுத்ததும் தப்ப முயன்றனர். இதனால் சந்தேகம் அதிகரித்து தொடர்ந்து வீடியோவை அனுப்பி வைத்து விசாரித்த போது தான் குழந்தை மீட்கப்பட்டது.
தனிப்படைக்கு எஸ்.பி. பாராட்டு
எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 23ம் தேதி இரவு குழந்தை கடத்தப்பட்டது. 3 நாட்களில் துரித விசாரணை மேற்கொண்டு குழந்தையை மீட்டு உள்ளோம். இதற்காக தீவிரமாக பணியாற்றிய தனிப்படை போலீசார், ரயில்வே போலீசார், கேரள ரயில்வே போலீசார் மற்றும் கேரள போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். பஸ் நிலையத்தில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நடைபாதைகள், பஸ் நிலைய பிளாட்பாரங்களில் தங்கி இருப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெற்றோர் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மீட்கப்பட்ட குழந்தைக்கு காவல்துறை சார்பில் புதிய ஆடைகள், பழங்கள், பிஸ்கட் உள்ளிட்டவற்றையும் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் வழங்கினார்.
கேரள போலீசை பாராட்டிய எஸ்.பி.
இந்த சம்பவத்தில் குழந்தையை மீட்க கேரள போலீசார் பெருமளவில் உதவினர். கடைசியாக சிறையின் கீழ் ரயில் நிலையத்தில் இருந்த குழந்தையை பார்த்ததும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு தகவல் தெரிவித்த கேரள போலீஸ்காரர்கள் ஜோதிஸ் குமார், சாம்லால், சுனில்லால் ஆகியோரையும் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் பாராட்டினர். டி.எஸ்.பி. நவீன்குமாரும் பாராட்டு தெரிவித்தார்.
பிச்சை எடுக்க பயன்படுத்த திட்டம்
குழந்தையை கடத்தி சென்ற சாந்தி, நாராயணன் ஆகியோர் மீது வேறு வழக்குகள் உள்ளதா? என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை கடத்தி சென்றவர்கள், அதை கையில் வைத்து பிச்சை எடுக்கவே திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கேரளாவை தாண்டி செல்லாததால், விரைவில் மீட்க முடிந்தது. வட மாநிலங்களுக்கு கொண்டு சென்றிருந்தால் மீட்பது பெரும் சிரமம் என்று போலீசார் தெரிவித்தனர்.