பனாஜி: கோவா மாநில தின கொண்டாட்டம் பனாஜியில் கடந்த 30ம் தேதி நடந்தது. காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியையொட்டி அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் ஆகியோரின் படங்கள் இருந்தன. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் படம் இடம் பெறாததால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் அதிகாரப்பூர்வ கோவா மாநில தின போஸ்டரில் கார்கேவின் படம் வேண்டுமென்றே விடுபட்டுள்ளது.
இதன் மூலம் அந்த கட்சி தங்களுடைய தலித் தலைவரை அவமானப்படுத்தியுள்ளது என்று பாஜ தெரிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கரிடம் கேட்ட போது, கட்சி போஸ்டரில் கார்கேவின் படம் தவறுதலாக விடுபட்டுள்ளது.நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் கார்கே படம் உள்ளது.இதில் சிறிய தவறு நிகழ்ந்துவிட்டது என்றார்.