புதுடெல்லி: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கனடா நாட்டில் வசித்து வந்த காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அங்கு சமீபத்தில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகள் சீக்கியர்கள் தோற்றத்தில் இருந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் சாட்சி அளித்துள்ளனர். இதுதவிர ஏற்கனவே பஞ்சாப்பில் தாதா கும்பல்களுக்கு இடையே பழிக்கு பழி வாங்க கொலைகள், போதை பொருள் கடத்தல்கள் தொடர்கதையாக உள்ளன.
இவற்றில் தொடர்புடையவர்களை குறிவைத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மற்றும் சண்டிகரில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பஞ்சாப்பில் அமிர்தசரஸ், மோகா, பசில்கா, லூதியானா, மொகாலி, பரித்கோட், பர்னாலா, பதிண்டா, பெரோஷ்பூர், எஸ்ஏஎஸ் நாகா மற்றும் ஜலந்தர் மாவட்டங்களில் 30 இடங்களில் சோதனை நடந்தது. மொத்தம் 53 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கி, வெடி பொருட்கள், டிஜிட்டல் கருவிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.