*3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
கடையம் : கடையம் அருகே வடகுருவபத்து கால்வாய் தொட்டி பாலம் இடிந்து விழுந்தது. இதனால் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடையம் அருகே கடனாநதி அணையில் இருந்து தெற்கு குருந்துடையார்குளம், வடக்கு குருந்துடையார்குளம், சம்பன்குளம், விளாத்திகுளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வட குருவபத்து கால்வாயில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இரு பகுதிகளில் கட்டப்பட்ட தொட்டி பாலம் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வந்தது.
இந்த வடகுருவபத்து கால்வாய் மூலம் நேரடி மற்றும் குளங்கள் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் நிலையில் கடந்த 4ம்தேதி அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாசன விவசாயிகள் நெல், கடலை, சிறு கிழங்கு, சின்ன வெங்காயம் உள்ளிட்ட நாற்றுகளை நட்டிருந்த நிலையில் வட குரு விபத்து கால்வாய் தொட்டி பாலத்தின் ஒரு பகுதி வலுவிழந்து திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து தெரியவந்ததும் திரண்டுவந்த வடகுருவபத்து கால் விவசாயிகள், தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கியும் சிமென்ட் குழாய் அமைத்தும் தண்ணீர் கொண்டு சென்றனர்.
ஆனால், இவ்வாறு அடைக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே ஏற்பட்ட மண்ணரிப்பால் மண் மூட்டைகள் இடிந்து மீண்டும் விழுந்தது. இதனால் தண்ணீர் வீணாகச் செல்வது தொடர்ந்தது. இதனால் அவதிப்படும் விவசாயிகள், சுமார் 20 அடி நீளமுள்ள சிமென்ட் குழாயை அப்பகுதியில் அமைத்து குளங்களுக்கும் வயல் பகுதிகளுக்கும் தற்காலிகமாக தண்ணீர் கொண்டு செல்ல போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பருவமழை முடிந்த பிறகு பழைய தொட்டி பாலத்தை இடித்துவிட்டு
புதிதாக பாலம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.