திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள காரியவட்டத்தில் கேரளா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவி சர்வதேச உறவுகள் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவரிடம் பல்கலைக்கழகத்தில் நீர்வாழ் உயிரியல் துறை தலைவராக இருக்கும் இணை பேராசிரியரான ராபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி புகார் செய்தார்.
இதுபற்றி விசாரணை நடத்தி பல்கலைக்கழக துணைவேந்தர் மோகனனிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து துணைவேந்தர் மோகனன் தலைமையில் அவசர சிண்டிகேட் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இணை பேராசிரியர் ராபியை சஸ்பெண்ட் செய்ய தீர்மானிக்கப்பட்டது. மேலும் துறை தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் ராபி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வங்கதேச மாணவி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.