திருவனந்தபுரம்: கேரள அரசு ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு திருப்பூரைச் சேர்ந்த 4 பேருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் 2 நாள் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. கேரள அரசு ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.25 கோடி டிஇ 230662 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இந்த டிக்கெட் தமிழக-கேரள எல்லையான கோவை அருகே வாளையாரிலுள்ள ஒரு கடையில் விற்பனையானது தெரியவந்தது. அந்த டிக்கெட்டை கோவை அன்னூரை சேர்ந்த நடராஜன் என்பவர் வாங்கிச் சென்றதாக லாட்டரிக் கடைக்காரர் கூறினார்.
அந்த நபர் மொத்தம் 10 டிக்கெட் வாங்கியதாகவும் அதில் ஒன்றுக்குத் தான் முதல் பரிசு கிடைத்தது என்றும் கடைக்காரர் கூறினார். சிறிது நேரத்திலேயே ஒருவர் முதல் பரிசு விழுந்த எண் கொண்ட டிக்கெட்டை கையில் பிடித்தபடி உள்ள ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வெளியானது. அவர்தான் ரூ.25 கோடி பெற்ற அதிர்ஷ்டசாலி என்று கருதப்பட்டது. ஆனால் பின்னர் தனக்கு பரிசு விழவில்லை என்றும், தமாசுக்காக அவ்வாறு செய்ததாகவும் அவர் கூறும் ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. நேற்று மாலை வரை யாருக்கு பரிசு விழுந்தது என தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறை அலுவலகத்திற்கு திருப்பூரை சேர்ந்த 4 பேர் வந்தனர். அங்கிருந்த உயரதிகாரியை அவர்கள் அணுகி, தங்களுக்குத் தான் ரூ.25 கோடி பரிசு விழுந்தது என்று கூறி டிக்கெட்டை ஒப்படைத்தனர். அந்த அதிகாரியும் டிக்கெட்டை வாங்கி பார்த்து அது உண்மையான டிக்கெட் தான் என்பதை உறுதி செய்தார்.இந்த 4 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவாக உள்ள பாலக்காட்டை சேர்ந்த ஒருவரை சந்திக்க வந்தனர். திரும்பிச் செல்லும் வழியில் 3 டிக்கெட்டுகள் எடுத்ததாகவும், அதில் ஒரு டிக்கெட்டுக்குத் தான் பரிசு விழுந்ததாகவும் இவர்கள் கூறினர்.
கேரள லாட்டரியில் பரிசு கிடைத்தவர்கள் பெயர் பாண்டியராஜ், நடராஜன், குப்புசாமி, ராமசாமி என்பது தெரியவந்தது. பரிசுத் தொகையை 4 பேரும் சேர்ந்து சமமாக பங்கிட்டு கொள்ள தீர்மானித்துள்ளனர். கேரள அரசு லாட்டரியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு கிடைத்தால் நோட்டரி அட்வகேட் வழங்கும் சான்றிதழ் உள்பட சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆவணங்களை திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தால் ஒரு மாதத்திற்குள் அவர்கள் கூறும் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.