பெரும்புதூர்:கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஷ்ரஃப். இவரது மகன் முஹம்மத் அஷ்மில் வயது (19). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் நண்பர்களுடன் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முஹம்மத் அஷ்மில் தனது நண்பர்களுடன் வாரணவாசி அருகே குன்னவாக்கம் பகுதியில் உள்ள மூடப்பட்ட கல்குவாரியில் குளிக்க சென்றனர். குளிக்க சென்ற 5 பேரில் இருவர் மட்டும் கல்குவாரி நீரில் குளித்து கொண்டிருந்தபோது முஹம்மத் அஷ்மில் மற்றும் அவருடன் குளித்த மற்றவருக்கும் யார் நீண்ட தூரம் நீச்சல் செய்வது என்ற போட்டி நிலவியது.இந்த போட்டியில் முஹம்மத் அஷ்மில் மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார் உடனே கரையில் இருந்த நண்பர் ஒருவர் காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் முஹம்மத் அஷ்மில் நீரில் மூழ்கியுள்ளர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் முஹம்மத் அஷ்மில் உடலை தேடி வந்த நிலையில் 10 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.