சென்னை: தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் மீது கேரளாவை சேர்ந்த சர்மிளா என்ற பெண் திருநெல்வேலி காவல் ஆணையரிடம் அளித்த புகாரில்விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பி அளித்து விட்டு, மீதி பணத்தை தராமல் மிரட்டுகிறார் என கூறியிருந்தார். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. சர்மிளாவும் இதுகுறித்து சமூக வலைத் தளங்களில் பதிவுகளை பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இதுசம்பந்தமாக சர்மிளாவுக்கு எதிராக விஜயபாஸ்கர் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார், விசாரணைக்கு வந்த பொழுது விஜயபாஸ்கர் தரப்பில் வழக்கறிஞர்கள் நித்யேஷ் நட்ராஜ், வைபவ் வெங்கடேஷ், அனிருத் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரான சி.விஜயபாஸ்கர் சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அவர் மீது தவறான அவதூறுகளை கூற கூடாது. எனவே, அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக சர்மிளாவுக்கு ரூ. 1 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், சமூக வலைதளங்களில் அதாவது பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் தளங்களில் மனுதாரர் குறித்து பகிர்ந்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.