சென்னை: கேரள மாநில கடற்கரையில் எல்சா-3 கப்பல் விபத்தால் தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் இதர பொருட்களை அகற்ற எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், எண்ணெய் பரவல் உள்ளதா எனவும், மீன்வளம் மற்றும் கடல்சார் உயிரினங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளரிடம் கேட்டறிந்தார்.
மீன்வளத்துறையின் மூலமாக மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தை கண்டறிய ஆய்வை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். தற்போதைய நிலவரப்படி எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழ்நாட்டின் கடற்கரையில் ஒதுங்கவில்லை. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சூழ்நிலையை தொடர்ந்து கவனமாக கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.