திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் எரியும் தீயை அணைக்க கடலோர காவல்படையினர் 3வது நாளாக போராடி வருகின்றனர். கப்பலின் மேற்புரம் 671 கண்டெய்னர்களும், அடிப்புறம் 1,083 கண்டெய்னர்களும் உள்ளன. 2 ஆயிரம் டன் எண்ணெய், 240 டன் டீசல் உள்ளதால் தீ பரவி கப்பல் முழுமையாக எரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 3வது நாளாக கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூர் கப்பலில் தீ எரிந்து கொண்டிருக்கிறது. கப்பலில் உள்ள 143 கண்டெய்னர்கள் சுற்றுசூழலுக்கு, மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ரசாயன பொருட்கள் உள்ள கண்டெய்னர்கள் ஆகும்.
இவை தற்போது தீயில் எரிந்து கொண்டிருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 1,754 கண்டெய்னர்கள் உடன் சென்ற கப்பலில் 1,083 கண்டெய்னர்கள் கீழ்ப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தீயை கட்டுக்குள் கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக உள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தீயை அணைக்கும் பணி நடந்து வரும் நேரத்தில், கப்பல் தொறந்து நகர்ந்து கொண்டிருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பட்சத்தில் கப்பலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் கடலோர காவல்படை தயாராகி வருகின்றனர். கப்பலின் பயன்பாட்டிற்காக எரிபொருள், 2 ஆயிரம் டன் எண்ணெய், 240 டன் டீசல் உள்ளதால் தீ பரவி கப்பல் முழுமையாக எரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.