கோழிக்கோடு: கேரளா மாநிலம் கொழும்புவில் இருந்து மும்பைக்கு சென்ற சரக்கு கப்பல் கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்தது. தீப்பிடித்த உடனே கப்பலில் இருந்த 18 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர்.
கொழும்பிலிருந்து மும்பைக்கு சரக்குக் கப்பல் ஒன்று கண்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு கடற்கரையிலிருந்து வடமேற்கே 144 கி.மீ தொலைவில் உள்ள விரிகுடாவில் சரக்குக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 18 ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு கடலில் குதித்து தப்பினர். கடலில் குதித்த 18 ஊழியர்களை மீட்க ஐஎன்எஸ் சூரத் என்ற கப்பல் விரைந்துள்ளது. தீப்பிடித்த சரக்கு கப்பலில் இருந்து 20 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.
கப்பலில் உள்ள தொழிலாளர்கள் கேரள கடற்கரையை அடைந்தால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்தான தகவல் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கையில் கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய வான் ஹை 503 என்ற கப்பல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.