திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழைக்கு ஒரு வாரத்தில் 42 பேர் பலியானார்கள். கேரளா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து அடைமழை பெய்தது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்பட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பம்பை, அச்சன்கோவில், மணிமலை, பெரியாறு மீனச்சல் உள்பட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனால் பல சிறிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மழைக்கு 3 மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு வாரத்தில் கன மழைக்கு 42 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 189 வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 6671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 8899 ஹெக்டர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ரூ.9.5 கோடி மதிப்பிலான விவசாய ெபாருட்கள் சேதமடைந்தன. தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. நேற்று கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மட்டும் ஓரளவு மழை பெய்தது. மற்ற பகுதிகளில் மழையின் வேகம் குறைந்துள்ளது. இன்று குறிப்பிடும்படியாக எந்த மாவட்டத்திலும் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை .