திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வரும் 31ம் தேதிவரை கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீசிய பலத்த காற்றில் தண்டவாளங்களில் மரங்கள், வீட்டுக் கூரைகள் விழுந்ததால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பலத்த காற்றில் கோழிக்கோடு மாவட்டம் மாத்தோட்டம்-அரீக்கோடு இடையே தண்டவாளத்தில் ஏராளமான மரங்கள் மற்றும் வீட்டுக் கூரைகள் பறந்து விழுந்தன. அலுமினியம் ஷீட்டுகள் ரயில்வே மின்சார வயர்கள் மீது விழுந்ததில் தீப்பொறிகள் பறந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த சமயத்தில் அந்தப் பாதையில் திருநெல்வேலி-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
ஆபத்தை உணர்ந்த அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு அபாய ஒலி எழுப்பினர்.அதைத்தொடர்ந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் கூரைகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும். இதனால் திருநெல்வேலி-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது.