டெல்லி: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை வெளுத்து வாங்குவதால் கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா,கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தபடி இருக்கிறது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ரெட் அலெர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.