திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று (மே 31) ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கான சலுகைகள் வழங்க ரூ.6 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. கேரளாவில் பள்ளிகளில் சேரும் போது ஒரு காலத்தில் பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படவில்லை. அப்போது பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பிறந்த தேதி மே 31 என்று குறிப்பிடப்பட்டது. இதனால் உண்மையான பிறந்த தேதி வேறாக இருந்தாலும் அவர்களது அனைத்து சான்றிதழ்களிலும் பிறந்த தேதி மே 31 என்று தான் இருக்கும்.
இந்த சான்றிதழுடன் அரசு வேலையில் சேருபவர்கள் மே 31ம் தேதி ஓய்வு பெறுவார்கள். இதன்படி நேற்று ஒரே நாளில் கேரளாவில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். கேரள மின்வாரியத்தில் இருந்து 1022 ஊழியர்களும், தலைமைச் செயலகத்தில் இருந்து 221 ஊழியர்களும் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 6000 கோடிக்கு மேல் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் கேரள அரசுக்கு இது மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.