திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் வில்சர் பிரான்சிஸ். கடந்த நவம்பர் 16ம் தேதி இதே துறையில் பணிபுரியும் ஒரு பெண் போலீசை இவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் போலீஸ் முதலில் சைபர் கிரைம் எழுத்தரான அனு ஆண்டனியிடமும், பின்னர் அவர் மூலம் ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் ஸ்டார் மோனிடமும் புகார் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் போலீசை ஸ்டார்மோன் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பின்னர் இந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண் போலீஸ் கேரள உள்துறை செயலாளரிடம் புகார் செய்தார். இதையடுத்து இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த கேரள டிஜிபிக்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பெண் போலீசின் புகாரை மூடி மறைப்பதற்காக அனு ஆண்டனியின் மூலம் சப் இன்ஸ்பெக்டர் வில்பர் பிரான்சிசிடம் இருந்து ஸ்டார்மோன் ரூ.25 லட்சம் கேட்டது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் பணியில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்ய கேரள உள்துறை செயலாளர் உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.