திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடும்பத் தகராறில் பெண் போலீசை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்கொன்று தப்பி ஓடிய கணவனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). அவரது மனைவி திவ்ய (35). காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 7ம் வகுப்பில் படிக்கும் ஒரு மகன் உண்டு. இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திவ்ய விவாகரத்து கோரி கண்ணூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆகவே கடந்த சில மாதங்களாக திவ்ய தனது மகனுடன் அருகில் கரிவெள்ளூர் பகுதியிலுள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அதைத்தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிந்த பிறகு திவ்ய வீட்டுக்கு திரும்பினார். இந்தநிலையில் மாலை சுமார் 6 மணியளவில் பைக்கில் மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார் ராஜேஷ். அப்போது வீட்டுக்குள் புகுந்து திவ்யயை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதை தடுக்க வந்த திவ்யயின் தந்தை வாசுவையும் வெட்டினார். அதன் பிறகு ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அந்த பகுதியினர் மீட்டனர்.
உடனடியாக 2 பேரையும் பையனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திவ்ய பரிதாபமாக இறந்தார். இது குறித்து வளபட்டணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தப்பி ஓடிய ராஜேஷ் அங்குள்ள ஒரு பாரில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இருந்த ராஜேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.