திருவனந்தபுரம்: கடந்த இரு வாரங்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே நடுக்கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டு எப் 35 பி ரக அதிநவீன போர் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கடந்த இரு வாரங்களாக தீவிரமாக முயற்சித்தும் இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முடியவில்லை. இங்கிலாந்தில் இருந்து இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இந்த போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விமானத்தை கேரள சுற்றுலாத்துறை வித்தியாசமாக தங்களது விளம்பர மாடலாக பயன்படுத்தி உள்ளது. ‘எனக்கு கேரளா மிகவும் பிடித்து விட்டது, இங்கிருந்து திரும்பிச் செல்ல மனதில்லை’ என்ற வாசகங்களுடன் விமானத்தின் போட்டோவை பயன்படுத்தி கேரள சுற்றுலாத்துறை ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. நிமிட நேரத்தில் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கடந்த சில தினங்களுக்கு முன் இதே விமானம் ஓஎல்எக்சில் விற்பனைக்கு இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் விளம்பரம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.