திருவனந்தபுரம்: கேரளாவில் காலரா பாதித்து வாலிபர் பலியானார். அவருடன் விடுதியில் தங்கியிருந்த 9 பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவருக்கு காலரா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் காலரா நோய் பரவுவது கடந்த சில வருடங்களாக கட்டுக்குள் இருந்தது. இந்த நோய் பாதித்து கடைசியாக கடந்த 2017ல் ஒருவர் பலியானார். இந்தநிலையில் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதியில் தங்கியிருந்த 9 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அனைவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு காலரா பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே அதே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அனு (26) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு காலரா பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுவும் நெய்யாற்றின்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விடுதியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் வெஸ்ட் நைல் காய்ச்சல், அமீபா மூளைக் காய்ச்சல், டெங்கு, எலிக்காய்ச்சல் உள்பட தொற்று நோய்கள் பரவி வரும் நிலையில் கேரளாவில் காலராவுக்கு ஒருவர் பலியாகி உள்ளது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.